அகதிகள் அணியின் யுஸ்ரா மார்டினி எனும் நீச்சல் அழகி – ஒலிம்பிக் அழகியின் சுவாரஸ்ய கதை ..!

ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் அணிவகுப்பில் இரண்டாவதாக ஒரு அணி வந்தது. அது தான் அகதிகள் அணி. பல்வேறு நாடுகளில் இருந்து அகதிகளாக புலம்பெயர்ந்தவர்கள் தங்க இடமில்லாமல் தங்களுக்கென அடையாளம் இல்லாமல் இருந்து வருகின்றனர்.

அந்தக் குறையை அவர்களுக்கு உரிய அடையாளம் கொடுக்கும் வகையில், கடந்த ரியோ ஒலிம்பிக்கில் ‘அகதிகள் அணி’ சேர்க்கப்பட்டது.

ரியோ ஒலிம்பிக்கை தொடர்ந்து இரண்டாம் முறையாக, டோக்கியோ ஒலிம்பிக்கிலும் ‘அகதிகள் அணி’ பங்கேற்றுள்ளது.

இந்த அணியின் நீச்சல் வீராங்கனை யுஸ்ரா மார்டினி என்பவரின் கதை இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் உத்வேகம் கொடுக்கக் கூடியது என்றால் மிகையல்ல. மற்ற அகதிகளை போல அல்ல இவரது வாழ்க்கை.

யுஸ்ரா மார்டினி

யார் இந்த யுஸ்ரா மார்டினி?

யுஸ்ராவின் பூர்வீகம் போர் முழக்கம் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் நாடான சிரியா தான். போர் வலிகளைக் கொண்ட நாட்டில் இருந்தாலும் இவரின் குடும்பத்தினர் பலரும் நீச்சல் வீரர்கள், யுஸ்ராவின் தந்தையும்கூட. இந்த அடிச்சுவட்டை பின்பற்றி சிறு வயதிலேயே யுஸ்ராவுக்கும் நீச்சல் பயிற்சி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் அவரின் தந்தை.

ஆனால் அப்போதெல்லாம் நீச்சல் கற்றுக்கொள்ள யுஸ்ராவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. அதற்கான காரணம், தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் என்பதே.

ஆனால், அவரின் தந்தையின் விடாப்பிடியால் வேறுவழியே இல்லாமல் நீச்சல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் யுஸ்ரா. விருப்பம் இல்லாமல் கற்றுக்கொண்டாலும், சிறுவயதிலேயே அவர், நீச்சல் திறமை அவரின் வயதை ஒத்த மற்ற சிறுமிகளிடமிருந்து அவரை வேறுபடுத்தி காண்பித்தது. 9 வயதாகும்போது மிக வேகமாக நீந்தும் திறனைப் பெற்றிருந்திருக்கிறார் யுஸ்ரா.

யுஸ்ரா மார்டினி
யுஸ்ராவின் முதல் ஒலிம்பிக் அனுபவம்

2008-ல் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் தான். ஆம், அப்போது தான், முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒலிம்பிக் போட்டிகளை பார்த்துள்ளார். அந்த ஒலிம்பிக்கில் நீச்சல் விளையாட்டில் டாப்பில் இருந்த அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் நீந்துவதைக் காட்டி, யுஸ்ராவுக்கு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார் அவரின் தந்தை.

நீச்சல் விளையாட்டின் ஹீரோவாக இன்றளவும் அறியப்படும் மைக்கேல் பெல்ஸ்ப்ஸ் ஏற்படுத்திய தாக்கம் யுஸ்ராவை உத்வேகம் அடைய வைத்துள்ளது. அன்று ஏற்பட்ட தாக்கத்தால் பெல்ஸ்ப்ஸை போல் தானும் ஒரு ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் வீராங்கனையாகப் பங்கேற்க வேண்டும் என்று கனவு காணத் தொடங்கியிருக்கிறார் யுஸ்ரா.

கனவுகள் இருந்தாலும், அதற்கு முட்டுக்கட்டையாக இருந்துள்ளது சிரியாவின் உள்நாட்டுப்போர். உச்சக்கட்டத்தை அடைந்த உள்நாட்டு போரால் கிட்டத்தட்ட ஒரு வருடம் நீச்சல் பயிற்சி வாடையே இல்லாமல் இருந்துள்ளார். போதாக்குறைக்கு 2015ம் ஆண்டு தீவிரமடைந்த போர் அவரின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது. 2015 போரில் அவரின் வீடு முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட, போரின் கோரத் தாண்டவத்தால் யுஸ்ராவும் அவரின் தங்கை சாராவும் சிரியாவை விட்டு வெளியேறினர்.

லெபனான், துருக்கி எனப் பல நாடுகளைக் கடந்து, கிரேக்க நாட்டை அடைந்த அவர்கள், அங்கிருந்து கடல் வழியாக செர்பியா, ஹங்கேரி, வழியாக ஜெர்மனிக்குச் சென்று விட வேண்டும் என்பதை திட்டமாக வைத்துள்ளனர். இதற்காக கிரீஸின் கடற்கரைப் பகுதியில் அவர்கள் ஒரு படகில் பயணம் செய்ய ஆரம்பித்தனர்.

அவர்கள் பயணம் செய்தது ஒரு சிறிய படகு. மொத்தமே 7 பேர் வரை பயணம் செய்யலாம். ஆனால், 18க்கும் அதிகமானோர் பயணிக்க வேண்டிய நிலை. அத்தனை பேரும் அகதிகள். இந்தநிலையில் தான் நடுக்கடலில் சென்றுகொண்டிருக்கும்போது, படகு இன்ஜின் பழுதாகி நின்றுவிட்டது.
இப்போது படகை தள்ளிக்கொண்டு சென்றால் மட்டுமே, கரையை கடக்க முடியும். படகில் இருந்தவர்களில் யுஸ்ரா, சாரா தவிர மற்ற இரு ஆண்களுக்கு மட்டுமே நீந்த தெரியும். உடனே நால்வரும் கடலுக்குள் குதித்து நீந்திக்கொண்டே படகை தள்ளியுள்ளனர். பனியில் உறையச் செய்த கடல் நீரில் நீண்ட நேரம் நீந்த முடியவில்லை. இதனால் யுஸ்ராவின் சகோதரியும், மற்ற இரண்டு ஆண்களும் முயற்சியைக் கைவிட்டுப் படகில் ஏறி அமர்ந்து கொள்ள யுஸ்ரா மட்டும் முயற்சியை கைவிடவில்லை.

“நீச்சல் பயிற்சி செய்ய இதைவிட சிறப்பான தருணம் எனக்குக் கிடைக்காது,” என்று கூறிக்கொண்டே, படகை தள்ளிக்கொண்டு படகில் பயணம் செய்த மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் இப்படி செய்து காப்பாற்றிய போது அவருக்கு வயது 17 மட்டுமே.
இதுபோன்ற பல்வேறு போராட்டங்களை கடந்து ஐரோப்பா வழியே ஜெர்மனியை அடைந்துள்ளனர். பின்னர், அகதியாக அங்கே வாழ்க்கையை நடத்தியுள்ளனர். உறவினர் ஒருவரின் மூலமாக அங்கே உள்ளூர் நீச்சல் கிளப்பில் சேர்ந்து சிரியாவில் விட்ட பயிற்சியை தொடங்கினார்.

இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் அகதிகள் அணி இடம்பெற அதில் 18 வயதே ஆன வீராங்கனையாக தனது கனவை நோக்கிய முதல் படியை எடுத்து வைத்தார் யுஸ்ரா. அவரின் வாழ்க்கைப் போராட்டமே, அவருக்கான அங்கீகாரத்தையும் தேடிக்கொடுத்தது. ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாள் அகதிகள் அணிக்கான கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு யுஸ்ராவுக்கே கிடைத்தது.

என்றாலும், பதக்கம் அவரை வெற்றிக்கோட்டின் அருகே கொண்டு செல்ல வைத்தது. என்றாலும் சர்வதேச கவனம் யுஸ்ரா மீது திரும்பியது. அவரை ‘உண்மையான வீராங்கனை’ என்று பாராட்டியது சர்வதேச ஊடகங்கள். இந்த முறை (டோக்கியோ ஒலிம்பிக்கில்) பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் காத்திருக்கிறார் யுஸ்ரா.

தனது சொந்த வாழ்க்கையை மீட்டெடுக்க ஏற்கனவே எதிர்நீச்சல் அடித்த, யுஸ்ரா தனது பதக்கக் கனவையும் நிறைவேற்ற மீண்டும் ஒருமுறை எதிர்நீச்சல் அடிக்கக் காத்திருக்கிறார்.

அவரின் பதக்க கனவை தான் ஒட்டுமொத்த உலகமும் எதிர்நோக்கியள்ளது!

#Copy