அடுக்கடுக்காய் வெற்றிகளைக் குவிக்கும் லக்னோ அணி …!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 61 ரன்கள் எடுத்தார். இறுதி வரை ஆட்டமிழக்காத ரிஷப் பண்ட் 39* ரன்களும், சர்பராஸ் கான் 36 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ அணிக்கு அந்த அணியின் கேப்டனும், துவக்க வீரருமான கே.எல் ராகுல் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான டி காக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 80 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் வந்த லீவிஸ் மற்றும் தீபக் ஹுடா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்ததால், லக்னோ அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய ஷர்துல் தாகூர் முதல் பந்திலேயே தீபக் ஹூடாவை வெளியேற்றினார். இதன்பின் களத்திற்கு வந்த இளம் வீரரான அயூஸ் பதோனி அசால்டாக ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து லக்னோ அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார்.

டெல்லி அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷர்துல் தாகூர் மற்றும் நோர்கியா தலா 1 விகெட்டை கைப்பற்றினர்.

#Abdh