இந்திய கிரிக்கெட் அணியின் அண்மைய பேசுபொருளான தமிழகத்தின் நடராஜன் முழங்கால் உபாதை காரணமாக IPL தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் இடம்பெற்றுள்ள தமிழகத்தின் நடராஜன், கடந்த 2 ஆட்டங்களில் சன் ரைசேர்ஸ் அணிக்காக போட்டிகளில் பங்கேற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விலகலானது அணிக்கு மட்டுமல்லாது நடராஜனுக்கு பின்னடைவாகவே அமையவுள்ளது.
ஒக்டோபர் , நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலக கிண்ண இருபதுக்கு இருப்பது போட்டி இடம்பெறவுள்ள நிலையில் நடராஜனுக்கு தன்னை நிரூபிக்க சந்தர்ப்பம் இல்லாது போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தேசிய T20 அணியில் பூம்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரை அடுத்து 3 வது வேகப்பந்து வீச்சாளராக இடம்பிடிக்கவல்ல அருமையான வாய்ப்பு நடராஜனுக்கு காணப்பட்டது.
அவுஸ்திரேலிய தொடரில் அறிமுகமானதிலிருந்து இருபதுக்கு இருபது போட்டிகளிலும் அவுஸ்திரேலிய மண்ணில் நடராஜன் அற்புதமாக ஜொலித்திருந்தார்.
ஆனாலும் இப்போதைய நிலையில் பூம்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரை விடுத்து, சென்னை அணியின் தீபாக் சஹார், விராட் கோஹ்லியின் RCB அணியில் விளையாடும் சிராஜ் ஆகியோர் அற்புதமாக தமது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆகவே இவர்களை பின்தள்ளி இந்திய உலக கிண்ண அணியில் இடம்பிடிக்க முடியுமாக இருந்தால், நடராஜன் IPL போட்டிகளில் ஜொலிக்க வேண்டிய கட்டாய நிலைமை ஒன்று காணப்பட்டது, அப்படியான இக்கட்டான நிலைமைக்கு மத்தியில் நடராஜனுக்கு ஏற்பட்ட முழங்கால் உபாதை என்பது பலத்த பின்னடைவை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.