அமோல் மசூம்தார்….தோற்றுப் போன ஒரு ஜெர்சிக்காரன்
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது…சிலருக்கு அது செங் கம்பள வரவேற்பு கொடுக்கின்ற அதே வேளை பலருக்கு அது இரக்கமேயில்லாமல் பாலைவனத்தை பரிசளித்து விடுகின்றது. அட என்று ஆச்சர்யப்பட வைக்கின்ற திறமைசாலிகளாக இருந்தும் காலம் ஏனோ அவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே போடா ராஸ்கல் என்று துரத்தியடித்து விடுகின்றது. அவர்களை அம்போ என்று கை விட்டு விடுகின்றது என்ற இந்த கொஞ்சம் விரக்தியான முன்னுரையோடு உங்களிடம் ஒரேயொரு கேள்வி…”உங்களுக்கு சச்சின் டென்டுல்கரைத் தெரியுமா……..அவரைப் பற்றி நீங்கள் அறிவீர்களா..” என்ன என்னைப் பார்க்க நக்கலாக இருக்கின்றதா…ஒரு படத்தில் மிஸ்டர் குரோர்பதி நிகழச்சியில் சின்னக் கலைவாணர் விவேக் மயில்சாமியடம் “படையப்பா தமிழ் படமா இல்லை ஆங்கிலப் படமா” என்று கேட்பது போலிருக்கின்றது உங்கள் கேள்வி என்று நையாண்டியாக நீங்க்ள என்னைப்பாரத்து நகைப்பது எனக்கு புரிகின்றது.
உண்மைதான் “The Great Sachin…Legend of Cricket என்றும் God of Cricket என்று இன்று வரை கொண்டாடப்படுகின்ற பெட்டிங் மொன்ஸ்டர். சச்சினைத் தெரியும் ஓக்கே..உங்களுக்கு அமோல் மசோம்தாரைத் தெரியுமா…நிச்சயமாக அவரைப் பற்றி உங்களுக்க அவ்வளவாக தெரிந்திருக்காது…ஒரு சிலருக்கு மாத்திரம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கின்றது பலருக்கு அவர் பற்றி தெரிய வாய்ப்பே கிடையாது ராஜா. ஏனெனில் அவர் ஒரு சர்வதேச செலிபிரட்டி அல்ல. சர்வதேசத்துக்கு வராமலே தொலைந்து போன வால் நட்சத்திரம்.
- அவரும் சச்சின் போலத்தான்…அபாரமான திறமைசாலி. ஆனால் என்ன சச்சினுக்க வாய்ப்பு கிடைத்து தன்னை யாரென்று நிரூபித்தார் ஆனால் அமோல் மசூம்தார் கடைசி வரைக்கும் வாய்ப்பே கிடைக்காமல் யாருக்கும் தெரியாமல் காணாமலே போனார். சச்சின் படித்த மும்பாயின் சாரதாஜஸ்ரம் வித்யா மந்திரில்தான் அமோலும் படித்தார். சச்சினின் பெட்ச்மேட் அமோல். இருவரும் ஒரே நேரத்தில்தான் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார்கள். சச்சினுக்கு கோச்சிங் கொடுத்த அதே ராம்காந்த் அச்ரேக்கர்தான் அமோலுக்கும் கோச்சிங் கொடுத்தார். உங்களுக்கு ஞாபகமிருக்கின்றதா சச்சின் பாடசாலை மாணவராக இருக்கினற சந்தர்ப்பத்தில் அவரும் வினோத் காம்ப்ளியும் சேர்ந்து பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் 664 எனும் உடைக்கப்படாத இமாலய பார்ட்னெர்ஷிப்பினை உருவாக்கிய வரலாறு.
அந்த மேட்சில் அதே பாடசாலை அணியில் அமோலும் ஆடிக் கொண்டிருந்தார். சச்சினோ அல்லது வினோத் காம்பளியோ ஆட்டமிழந்தால் பேட் அப் கட்டி அடுத்த ஆட்டக்காரராக களத்துக்கு வர காத்திருந்தது அமோல்தான். 1993-1994 பருவ காலத்தில் மும்பை அணிக்காக ரஞ்சி போட்டிகளில் தனது முதலாவது ஆட்டத்திலேயே ஹர்யானா அணிக்கெதெிராக அமோல் 260 ரன்கள் அடித்து மிரட்டினார். அதன் பின்னர் அமோல் ஆடிய அத்தனை ஆட்டங்களும் வேறு லெவலில் இருந்தன. இந்தியாவின் மிகச் சிறந்த துடுப்பாட்ட நட்சத்திரங்களுல் அமோலும் ஒருவர் என புகழப்பட்டார். அந்தளவுக்கு நேர்த்தியாக இருந்தது அவரது துடுப்பாட்டம்.
ரஞ்சி போட்டிகளில் அவரது எவரேஜ் 50க்கும் மேல். இன்னொரு சச்சின் என்று அவரை பிரான்ட் செய்தனர். இந்தா இந்திய அணிக்குள்ளே அமோல் வரப் போகின்றார் என்று அரூடம் கூறிக் கொண்டிருந்தனர். அத்தனை பேரும் இந்திய அணிக்குள்ளே அவரது வருகைக்காக வழி மேல் விழிகளை பொருத்திக் கொண்டு காத்திருந்தனர். தொடர்ந்து துடுப்பாட்டத்தில் அமோல் சதங்களையும் அரைச் சதங்களையும் தெறிக்க விட்டுக் கொண்டிருந்தார். 1994ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்ட பத்தொன்பது வயதுக்குட்பட்ட இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 1994-1995 பருவ காலத்தில் ராகுர் ட்ராவிட் மற்றும் கங்குலியோடு சேர்ந்து இந்திய அணிக்கா விளையாடினார்.
ஆனால் பாடசாலையில் அவரோடு சேர்ந்து ஆடிய சச்சினும் வினோத் காம்ப்ளியும் அதே போல அவரோடு இந்திய ஏ அணியில் விளையாடிய ராகுல் ட்ராவிட மற்றும் கங்குலி போன்றோர் சர்வதேச கிரிக்கெட்டில் செய்ததெல்லாம் வரலாறு. ஆனால் இத்தனை திறமையிருந்தும் இந்தியாவுக்காக ஆகக் குறைந்தது ஒரேயொரு டெஸ்ட் ஒரேயொரு ஒரு நாள் போட்டி; எதுவுமே அமோலுக்கு கடைசி வரைக்கும் ஆடக் கிடக்கவில்லை;. “அமோலுக்கு இந்திய அணிக்காக விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது இந்திய அணியின் மிகப் பெரும் இழப்பு” என்று அடிக்கடி சொல்லுவார் ரவி சாஸ்திரி. ஆனாலும் என்ன அமோலை காலம் காணாமற் செய்தே விட்டது. கடைசி வரைக்கும் ரஞ்சி கோப்பை முஷ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளுடனேயே அவர் தனது கிரிக்கெட் கெரியரை முடித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்ப வேண்டியதாயிற்று.
சச்சின் ட்ராவிட் கங்குலி பொன்றோருக்கு இணையான திறமையிருந்தும் ரஞ்சி போட்டிகளில் ரன் மெஷினாக இருந்தும் அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஏன் கடைசி வரைக்கும் வாய்ப்பே கொடுக்காமல் அவரை அழ வைத்தனர் என்ற கேள்விக்கு துல்லியமான பதிலை அவரை நிராகரித்தவர்களுக்கும் அந்த ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம். மே பீ கிரிக்கெட் அரசியல்….மே பி தனிப்பட்ட காரணங்கள்…… குரோதங்கள்……..விரோதங்கள்……பழி வாங்கல்கள்…இன்னும் இருக்கலாம்
ஒரு அற்புதமான ஆட்டக்காரனை கடைசி வரைக்கும் வாய்ப்பே கொடுக்காமல் துரத்தியடித்த துயரமிக்க வரலாறு அமோலினுடையது. எவ்வளவு கனவுகளோடு அந்த இளைஞன் இருந்திருப்பான்; தனக்கும் இந்திய ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் தன்னாலும் தான் யாரென்பதனை காட்ட முடியும்..தொலைக்காட்சி ஸ்கிரினில் தான் பறக்க விடுகின்ற பவுன்டரிகளையும் சிக்சர்களையும் உலகம் பாரத்து கைதட்டுமென்று எத்தனை நம்பிக்கையோடு இருந்திருப்பார் அமோல். ஆனால் அத்தனையும் வெறும் பகற் கனவுகளாகவே போய் விட்ட காலத் துயர் அது.
இயக்குனர் சுசிந்திரனின் இயக்கத்தில் நம்ம விஷ்னு விஷால் நடித்த ஜீவா படத்தில் ஒரு காட்சி வரும்…இந்திய அணிக்காக ஆட வேண்டுமென்ற கனவுகளை சுமந்தவாறு கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசித்து விளையாடுகின்ற விஷ்னு விஷாலும் அவரது தாழந்த சாதி நண்பரும். விஷ்னுவிடம் நண்பன் சொல்லுவான் “விளையாடி தோத்தாக் கூட கவலையில்ல. ஆனா வாய்ப்பே கிடைக்காமே தோத்துப் போறதத்தான் தாங்க முடியாம இருக்கு’ என்பார். எப்பேர்பட்ட உண்மை.
இங்கு பலரின் நிலைமை இதுதான். விளையாடி தோற்றவர்களை விட வாய்ப்பே கிடைககாமல் தோற்றவர்கள்தான் அதிகம். அமோலுக்கு நிசச்யமாக அதில் முதலிடம் இருக்கின்றது. ஆனால் வெற்றி பெறறவர்களின் பயோகிரஃபியைத்தான் உலகம் எப்போதுமே ஆர்வமாக வாசித்துக் கொண்டிருக்கின்றது. தோற்றவர்கள் பற்றி யாருமே யோசிக்கக் கூட மாட்டார்கள். இங்கு நாம் கவனிக்கபட வேண்டும் என்றால் வெற்றி பெற வேண்டும். தோற்றவர்களுக்கு அல்லது தோற்கடிக்கபட்டவர்களுக்கு எந்தப் பெறுமானங்களும் கிடையாது.
சச்சின் ட்ராவிட் கங்கூலி போன்றவர்களைத்தான் உலகம் கொண்டாடும். மாற்றமாக அமோல் மசூம்தார் போன்றவர்களையல்ல.
உலகம் விசித்திரமானது
கிண்ணியா சபருள்ளாஹ்
சட்டத்தரணி
2021-02-16