அர்ப்பணிப்பு மிகுந்தவர்களாலேயே வாழ்க்கையில் சாதிக்க முடிகிறது- மிகப்பெரிய உதாரணம் நஷீம் ஷா வின் சோகக்கதை..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வருகின்ற 15வது ஆசிய கிண்ணப் போட்டித் தொடரின் நேற்றைய நாளில்(28) பரவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றது.
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி மிகப் பெரிய அளவில் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் வெற்றியை 5 விக்கெட்டுகளால் தனதாக்கியது.
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான சாஹீன் ஆப்ரிடி இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே உபாதைக்கு உருவாக்கியிருந்தார், இது மாத்திரமல்லாமல் மொகமட் வாசிம் ஜூனியர் உபாதையை சந்தித்து ஆசியக் கிண்ண வாய்ப்பை தவறவிட்டார்.
அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த இரண்டு பிரதான வேகப்பந்து வீச்சாளர்களும் ஆசியக் கிண்ணத்துக்கான குழாத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்த நிலையில் இரண்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதனால் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நேற்றைய (28) நாளில் நசீம் ஷா எனப்படும் 19 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் T20 போடடிகளில் அறிமுகமானார்.
அறிமுகமான அந்த போட்டியின் முதலாவது ஓவரை வீசியபோதே எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
2021 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் இடம்பெற்று T20 உலக கிண்ண போட்டிகளின்போது இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்தியாவின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களை எவ்வாறு ஷஹீன் அஃ்ரிடி திணறடித்து இந்தியாவிற்கு தோல்வியை ஏற்படுத்திக் கொடுத்தாரோ அதே மாதிரியான ஒரு சந்தர்ப்பம் நேற்றும் எட்டிப் பார்த்தது.
முதலாவது ஓவரை வீசிய அறிமுக வீரரான நசீம் ஷா முதலாவது ஓவரின் இரண்டாவது பந்தில் Inside edge மேலமாக லோகேஷ் ராகுலை ஆட்டமிழக்கச் செய்தார்.
அடுத்து வந்த விராட் கோலிக்கு அவர் வீசிய அற்புதமான இன்சுவிங் பந்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது, அடுத்த பந்து வீச்சில் நான்காவது பந்துவீச்சில் விராட் கோலி சிலிப் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த பாபர் அசாமிடம் பிடிகொடுத்தார், ஆனால் அந்த வாயப்பு நழுவி போகிறது .
சில வேளைகளில் நசீம் ஷா அந்த ஓவரில் விராட் கோலியை ஆட்டம் இழக்கச் செய்திருப்பாராக இருந்தால், 2021 ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் எப்படி இந்தியாவின் முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களும் விரைவாக ஆட்டமிழந்து இந்தியா தோல்வியைத் தழுவியதோ, அதே மாதிரியான ஒரு சந்தர்ப்பம் நேற்றைய நாளில் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்பேன்.
இப்போது இந்த நசீம் ஷா யார் என்பதை உங்களுக்கு சொல்கிறேன் -படியுங்கள் ?.
உள்ளூரில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நசீம் ஷா வினது ஆட்டத்திறன் காரணமாக பாகிஸ்தானின் 16 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பிடிக்கிறார், அதன் பின்னர் அதே ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணப் போட்டிகளில் தேர்வாகி கலக்குகிறார்.
பெருமளவில் முதல் தரப் போட்டிகளில் விளையாடிய போதிய அனுபவம் அவருக்கு இருக்கவில்லை , 6 முதல் தர போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய நசீம் ஷா மீது பாகிஸ்தான் தேர்வாளர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது, இதனால் 2019 நவம்பரில் அவுஸ்ரேலிய சுற்றுலா மேற்கொண்டு பாகிஸ்தான் அணியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்.
16 வயதாக இருக்கின்றபோது பாகிஸ்தான் அணி சார்பில் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் ஆசைக்கனவில்்திளைத்திருந்தவர் வாழ்வை புரட்டிப்போடவல்ல சோகமான சம்பவம் பதிவாகிறது.
நசீம் ஷா அவன் தாயர் மரணத்தை தழுவிக் கொள்கிறார்,
2019ஆம் ஆண்டு மிஸ்பா தலைமை பயிற்சியாளராக இருக்கின்ற போது பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 16 வயதான நசீம் ஷாவையும் அழைத்துச் செல்கிறார்கள்.
வெறுமனே 6 முதல் தர போட்டிகளில் மட்டும் விளையாடி இருந்தாலும் அவரது Pace & Bounce தேர்வாளர்களை கவர்ந்து இருந்த காரணத்தால் அவுஸ்ரேலிய ஆடுகளங்களில் இவர் சாதிப்பார் என்கின்ற நம்பிக்கையில் 16 வயது பாலகனை அழைத்துச் செல்கிறது பாகிஸ்தான் அணி .
டெஸ்ட் தொடருக்கு தயாராகிக் கொண்டிருந்த தருணத்தில் அவருடைய தாயார் மரணத்தை தழுவுகிறார், ஆனாலும் கூட தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்காமல் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட ஒரு போராட்ட வீரன் தான் இந்த நசீம் ஷா.
அவனது தாயாருடைய கோரிக்கையையும் விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது, தனக்கு மரணம் நேர்ந்தால் தன் மகன் மரணச் சடங்கில் பங்கேற்பதை புறந்தள்ளி விட்டு அவன் வாழ்நாள் லட்சியமான கிரிக்கெட்டில் அறிமுகம் ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆம் அதன் அடிப்படையில் நசீம் ஷா தாயாரின் மரணச் சடங்கில்கூட கலந்து கொள்ள முடியாது தவிர்த்து விட்டு, மனதை திடகாத்திரப் படுத்திக்கொண்டு 16 வயதான ஒரு பாலகனாய் இருக்கும் நசீம், தாயார் மரணத்தை தழுவிய அந்த தருணத்தில் அந்த மனநிலையோடு டெஸ்ட்டில் அறிமுகம் மேற்கொண்டார் என்றால் அவருடைய போராட்டமும் கிரிக்கெட்டுக்கான அவருடைய அர்ப்பணிப்பும் என்ன என்பதை இங்கே நான் உங்களுக்குப் புரியவைக்க வேண்டிய தேவையில்லை .
அந்த நசீம் ஷா தான் இப்போது இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது தன்னுடைய வேகத்தாலுப், விவேகத்தால் இந்தியாவிற்கு நெருக்கடியைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையில் சாதித்தவர்கள், சாதனையாளர்களாக இருந்தவர்களும், இருப்பவர்களும் இப்படியான தியாகிகள்தான், இந்த மாதிரியான அர்பணிப்பும், தியாக மனநிலையும் கொண்டவர்களால் மட்டுமேதான் சாதிக்க முடிகிறது என்பதற்கு நமது நசீம் ஷா ஓர் உதாரணம்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரி அல்லது வேகப்பந்து வீச்சாளர்களின் ஃபேக்டரி என்று அழைக்கப்படுகின்ற பாகிஸ்தான் மண்ணில் இருந்தே புதிய புதிய பந்து வீச்சாளர்கள் உருவாகி, சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை மிரட்டிக் கொண்டிருக்கின்றமை கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியமானது எனலாம்.
வசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ,சோயிப் அக்தர் உள்ளிட்ட சாதனையாளர்கள் ஒன்றாக கிரிக்கெட் ஆடிய காலத்திலெல்லாம், இந்தியாவின் துடுப்பாட்ட வீரர்கள் அவர்களுக்கு மிரண்டு போகவில்லை.
ஆனால் இப்போதைய இந்தியாவின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் பலரையும், பாகிஸ்தானில் இருந்து வருகின்ற புதிய பந்துவீச்சாளர்களே மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் எம்மைப் போன்று கிரிக்கெட் ரசிகர்களை கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் எனலாம்.
இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் புதுவித போதை என்பதை நேற்றைய போட்டியும் நமக்குத் தெள்ளத் தெளிவாய் எடுத்தியம்பியிருக்கிறது ❤️
✍️தி.தரணிதரன்