ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருது பிரபாத் ஜெயசூர்யாவுக்கு!!!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதம் ஒருமுறை ஐசிசியின் சிறந்த வீரரை தேர்வு செய்கிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாதத்தின் சிறந்த வீரரைத் தேர்வு செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். கடந்த ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில், ஐசிசியின் மாத வீரர் விருதுக்கு மூன்று வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.
அதன்படி, அந்த வீரர்களில் இங்கிலாந்தின் ஜானி பெயார்ஸ்டோ, பிரபாத் ஜெயசூர்யா மற்றும் பிரான்ஸின் குஸ்டாவ் மெக்கியோன் ஆகியோர் அடங்குவர்.
கடந்த ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில், ஐசிசியின் சிறந்த வீரர் விருது இன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூர்யா ஜூலை மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வென்றார். இதன்படி, ஐசிசி மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்ற இரண்டாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பிரபாத் ஜெயசூர்யா பெற்றார். முன்னதாக மே மாதம் ஐசிசியின் சிறந்த வீரர் விருதை ஏஞ்சலோ மேத்யூஸ் வென்றார்.
கடந்த மாதம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிரபாத் ஜெயசூர்யா, தனது முதல் போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் புத்தகத்தில் இணைந்தார்.
பின்னர் பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் பிரபாத் ஜெயசூர்யா 2 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி, கடந்த மாதம் தான் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த ஆண்டின் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்தார்.
அறிமுக பருவத்திலேயே கிரிக்கெட் அரங்கில் அசத்தி ICC விருதை வென்ற பிரபாத் ஜெயசூர்ய உண்மையில் பாராட்டப்படவேண்டியவரே ?