அவுஸ்திரேலியாவில் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்கப்போகும் சனத் ஜெயசூரிய …!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்கார்ரும் அணித் தலைவரும், பிரதம தேர்வாளருமான சனத் ஜெயசூரிய அவுஸ்திரேலியாவில் தலைமை பயிற்சியாளர் பதவியை வகிக்க தயாராகிறார்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் விக்டோரியா மாகாணத்தில் விக்டோரியா கிழக்கு கிரிக்கெட் சங்கத்தின் ஒரு கழகமாக இருக்கும் முல்கரேவ் கிரிக்கெட் சங்கத்தில் இப்போது சனத் ஜயசூரிய தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அந்த கழகத்தில் இலங்கையின் முன்னாள் தலைவர்களான டிஎம் டில்ஷான் மற்றும் உபுல் தரங்கா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இப்போது சனத் ஜயசூரியவை தலைமை பயிற்சியாளர் பதவியில் நியமிப்பதாக அந்த கழகத்தின் பணிப்பாளர் மலின் புள்ளைநாயகம் அறிவித்துள்ளார்.

51 வயதான சனத் ஜயசூரிய, 110 டெஸ்ட் போட்டிகளிலும் 445 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே குறித்த கிரிக்கெட் கழகத்தின் இரண்டு இலங்கையர்கள் இடம் பெற்றிருக்கும் நிலையில் இப்போது தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூரிய செயல்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

சனத் ஜெயசூரிய முதன்முதலாக பயிற்சியாளராக புதிய அவதாரம் ஒன்றை எடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.