ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

இந்திய அணி ஆடுகளத்திற்குத் தேவையான ரன்களையே அடித்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு கொஞ்சம் விரிவாக பார்ப்போம்!

ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணியின் உலகக் கோப்பைக்கான வேகப்பந்து வீச்சாளர்கள் திட்டத்தில், பும்ரா, புவி, ஹ்ர்சல், ஆவேஸ், அர்ஸ்தீப் மற்றும் தீபக் சஹர் இருக்கிறார்கள். ஏன் இவர்கள் மட்டும் இருக்கிறார்கள் என்பது தனி. சமி அப்போதிருந்தே கிடையாது. இதை அவரிடமும் சொல்லப்பட்டதாகத் தகவல் இருந்தது. இந்த நேரத்தில் ஆசியக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்படும் பொழுது பும்ரா, ஹர்சல் காயம், தீபக் காயத்திலிருந்து எந்த அளவு மீண்டுள்ளார் என்று தெரியாது. உலகக்கோப்பை திட்டத்தில் இல்லாத யாரும் அணிக்குள் தேவையும் இல்லை இல்லை என்பது முடிவு.

 

இதனால் புவி, ஆவேஸ், அர்ஸ் மூன்று பேரை மட்டும் எடுக்கிறார்கள். இப்படி ஒரு தைரியமான முடிவிற்கு போக, ஹர்த்திக் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் நல்ல லைன் அன்ட் லெண்த்தில் பந்து வீசிக் கொண்டிருந்தார். மேலும் யுஏஇ ஆடுகளங்கள் வேகம் மற்றும் சூழலுக்கு சரி சமமாகவே இருக்கும். இதனால் கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை, ரவி பிஷ்நோயைக் கொண்டுவருகிறார்கள்.

முன்னணி வீரர்களின் காயம் பிரச்சனையைக் கொடுத்தாலும் அதைத் தாண்டி ஒரு சரியான அணி அமைக்கப்பட்டது. ஆனால் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறினார், இதனால் தினேஷ் கார்த்திக்கை ப்ளேயிங் லெவனில் வைக்க முடியாமல் போகிறது. இன்னொரு பக்கம் வேகப்பந்துவீச்சாளர் ஆவேஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார். துபாய் ஆடுகளமோ நான்கு வேகப்பந்து வீச்சாளர்களைக் கேட்கிறது. மேலும் இதனால் ஒரேவிதமான சுழற்பந்து வீச்சு கூட்டணியைத் தொடர முடியவில்லை.

ஆனால் இந்தப் பிரச்சினையையும் சமாளித்து இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்திற்கு தேவையான ரன்களை ஸ்கோர் போர்டில் ஏற்றுகிறார்கள். புவி இடம் ஸ்விங் இல்லை, அர்ஸ்தீப், ஹர்திக் இருவரும் பவர் பிளே பவுலர்கள் இல்லை. இதனால் அடி விழுகிறது. பவர் பிளேவில் ஒன்றிரண்டு ஓவர்கள் வீச ஆள் இல்லாமல் போகிறது.

பந்துவீச்சு இப்படி கொஞ்சம் பலவீனமாக இருக்கும் பொழுது பேட்ஸ்மேன்கள் ஒரு பத்து பதினைந்து ரன்கள் சேர்த்து அடிக்க வேண்டும். ஆனால் இந்திய பேட்டிங் மிடில் வரிசை மொத்தமாக சரிந்து போனது. அப்படியிருந்தும் நல்ல ஸ்கோர் இருந்தது.

ஆனால் டாஸ் தோற்றது, ஆட்டத்தில் முக்கியமான கேட்ச் மற்றும் ரன் அவுட்டை தவறவிட்டது. இப்படியான விஷயங்கள் எல்லாம் ஆட்டம் கடைசி வரை போய் கிடைத்த தோல்வியில் முக்கிய பங்கு வகிக்கக் கூடியவை. ஆனாலும் ஒரு சர்வதேச அணியோ, அந்த அணிக்காகப் பேசுபவர்களோ இதை எல்லாம் காரணமாகச் சொல்லக்கூடாது. எதிரில் இருப்பவர்கள் வேண்டுமானால் சிந்தித்துக் கொள்ளலாம். இப்படியான ஒரு வெறுப்பேற்றும் தோல்வி, ஒரு சூதாட்டத்தில் எல்லா செல்வமும் இருக்கும் ஒரு ராஜாவுக்குக் கூட நடக்க கூடாது. துளி அதிர்ஷ்டம் கூட இல்லாத ஒரு தொடர் இது.

கிரிக்கெட் விளையாட்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டும் மிக முக்கியமான துறைகள். இதில் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் பந்துவீச்சு துறை பலவீனமடைகிறது. இப்படி இருக்கும் பொழுது தரமான அணிக்குத் தோல்வி என்பது வருவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மேலும் இந்த பந்துவீச்சு பலவீனம் மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்குள் வரும்பொழுது மறைந்துவிடும்.

இந்திய அணிக்கு நீண்ட காலமாக பிரச்சினையாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் குறிப்பாக டி-20 இல் இருந்து வந்தது, முதலில் பேட் செய்தால் ஆடுகளத்திற்கும் எதிரணிக்கும் தேவையான ரன்களை இலக்காக நிர்ணயிப்பதில்தான். இதுதான் பெரிய பிரச்சினை, ஆனால் இந்த பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டு இருக்கிறது. புள்ளிவிவரங்கள் அடிப்படையில் எடுத்துப் பார்த்தாலும் இது புரியும்!

அருகில் டி20 உலகக்கோப்பை இல்லாமல் இப்படி ஒரு அணியை தேர்வு செய்திருந்தால் மற்றும் ஜடேஜா, ஆவேஸ் கானை வைத்து விளையாடியும் தோற்று இருந்தால் நிச்சயம் ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்திருப்பேன்!

✍️ Richards

எமது YouTube தளத்துக்கு செல்ல 👇

அவைஸ்ரேலிய அணித்தலைவர் பின்ச்சின் மோசமான சாதனை 👇