ஆசை காட்டி மோசம் செய்தது இலங்கை அணி, உலக சாதனையுடன் தொடரை வென்று அசத்தியது இந்தியா..!

ஆசை காட்டி மோசம் செய்தது இலங்கை அணி, உலக சாதனையுடன் தொடரை வென்று அசத்தியது இந்தியா..!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்று முடிந்துள்ளது.

முதலாவது போட்டிகளில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவு செய்த இந்திய அணி ,இன்று மிகப் பெரிய போராட்டத்திற்கு மத்தியில் இரண்டாவது ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை தனதாக்கியது.

முன்னதாக  இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மினோத் பானுக மற்றும் அவிஸ்க பெர்னான்டோ ஆகியோர் ஆரம்ப விக்கட்டில் 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

சரித அசலங்க 65 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார், சாமிக கரிணாரத்ன அதிரடியாக 43 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க இலங்கை அணி 275 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பிரேமதாச மைதானத்தில் 276 என்பது மிகப்பெரிய கடினமான இலக்காகவே கணிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய அணியின் ஆரம்பவீர்ர் பிரித்வி ஷா முதல் ஓவரிலேயே ஹட்ரிக் பவுண்டரி அடித்து விரட்ட ஆரம்பித்தார். மூன்றாவது ஓவரை வீச அழைக்கப்பட்ட ஹசரங்க ஷாவை ஆட்டமிழக்கச் செய்து இலங்கைக்கு சாதகத்தை கொடுத்தார்.

அவருடைய பந்துவீச்சில் ஷா போல்ட் ஆனார், இஷன் கிஷன் கசுன் ரஜித்த பந்துவீச்சில் இன்சைட் எட்ஜ் மூலமாக ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்தது இந்திய அணி. முதல் 4 விக்கெட்டுகளும் 115 ஓட்டங்களுக்கு இழக்கப்பட்டன பின்னர் இந்திய அணி 160 ஓட்டங்களை பெற்ற நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்தது.

193 ஓட்டங்கள் பெற்றபோது 7 வது விக்கட்டும் வீழ்த்தப்பட இலங்கை அணி மிக இலகுவாக இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

ஆனாலும் மிக சிறந்த முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகின்ற திபாக் சஹார் இலங்கை ரசிகர்களின் கனவை தகர்த்தார்.

புவனேஸ்வர், குமார் சஹார் இணைந்து அற்புதமான 8-வது விக்கெட்டுக்கு 84 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து இந்தியாவிற்கு தொடர் வெற்றியை பரிசளித்தனர் .

இறுதி வரைக்கும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி உள்ளது.

1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் இந்திய, இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை அணி எதுவித தொடரையும் கைப்பற்றவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

சங்கக்கார ,மஹேல ஜெயவர்தன உள்ளிட்ட வீரர்கள் எல்லாம் விளையாடிய காலத்திலும் இலங்கை அணியால் இந்தியாவை ஒருநாள் தொடரில் வீழ்த்த முடியாத அவலநிலை தொடர்கிறது .

இது மாத்திரமல்லாமல் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தொடரை இந்தியா வென்று அசத்தி இருக்கின்றமை பாராட்டத்தக்கது.

இதைவிடவும் இந்திய அணி ஒரு உலக சாதனையைப் படைத்திருக்கிறது, ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் ஒரு குறித்த அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட அணி என்கின்ற உலக சாதனை இந்தியா வசமானது.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராகவும், அவுஸ்திரேலியா அணி நியூஸிலாந்து எதிராகவும் அதிகபட்சமாக 92 வெற்றிகளைப் பெற்றுக்கொண்டன .

இலங்கைக்கு எதிராக இந்தியா இன்று பெற்றுக்கொண்ட வெற்றி 93வது வெற்றியாக அமைந்து இருக்கின்றது. இது உலக சாதனையாக கணிக்கப்படுகிறது.

இது மாத்திரமல்லாமல் இலங்கை அணிக்கெதிராக ஒட்டுமொத்தமாக அனைத்து வகை போட்டிகளிலும் (ODI, Test ,T20) இலங்கையை 126 தடவைகள் இந்தியா தோற்கடித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எது எவ்வாறாயினும் மிகப் பெரிய போராட்டத்திற்கு மத்தியில் இந்தியாவிற்கு இந்த வெற்றிி கிடைத்திருக்கிறது.

வாழ்த்துக்கள் இந்திய-இலங்கை அணிகளுக்கு ?