ஆடுகள பராமரிப்பாளராக கடமையாற்றிய மேரியம்மா எனும் தமிழச்சி …!

ஆடுகள பராமரிப்பாளராக கடமையாற்றிய மேரியம்மா எனும் தமிழச்சி …!

இவரை மேரி அம்மா என்றே கிரிக்கெட் வட்டாரம் அறியும். சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் இவரது நாமம் சேர் டொன் பிராட்மன்னின் சரித்திரத்துடன் சேர்த்து அறியப்படுகின்றது..

கடல் தாண்டிய பிரயாணங்களுக்குக் கப்பலை மாத்திரம் நம்பியிருந்த காலத்தில் இங்கிலாந்துக்குச் செல்லும் அவுஸ்ரேலிய அணி இலங்கையில் (அப்போது பிரிட்டிசு சிலோன்) தரித்து நின்று விளையாடிச் செல்வார்கள்.

1948 இல் கிரிக்கெட்டின் பிதாமகர் என்று சொல்லப்படும் சேர் டொன் பிராட்மன் தலைமையிலான அவுத்திரேலிய அணி இங்கிலாந்துக்குச் செல்லும் வழியில் சதாசிவம் மகாதேவன் தலைமையிலான சிலோன் பதினொருவர் அணியுடன் தமிழ் யுனியன் கிரிக்கெட் கழகத்தின் சரவணமுத்து மைதானத்தில் விளையாடியது.

தமிழ் யூனியன் கழக மைதானத்தின் ஆடுகள பராமரிப்பாளராக பணியாற்றிய மேரி அம்மாவே அந்த போட்டிக்கான ஆடுகளத்தைத் தயார்ப் படுத்தியிருந்தார்.

பிராட்மன் ஆசியாவில் விளையாடிய ஒரே ஒரு போட்டி என்று பதிவிட்டவர் சொல்லியிருந்தார். ஆனால், அப்படியல்ல. அந்த காரணத்துக்காக மாத்திரம் மேரி அம்மா பிரபலமாக அறியப்பட்டிருக்கவில்லை.

1930 ஆம் ஆண்டே அவுஸ்ரேலிய அணி இங்கிலாந்து பயணத்தின் நடுவே, கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி இருந்தது. அந்த போட்டியில் பிராட்மன் 40 ஓட்டங்கள் அடித்து , அவரே விக்கெட்டுகளை தட்டியதால் (Hit Wicket) ஆட்டமிழந்திருந்தார்.

எனவே, 1948 இல் சரவணமுத்து மைதானத்தில் விளையாடிய போட்டி பிராட்மன்னின் இரண்டாவது போட்டி. பிராட்மன் ஆசியாவில் விளையாடியது இந்த இரண்டு போட்டிகள் மாத்திரம் தான்.

சரவணமுத்து மைதானத்தில் நடந்த போட்டியில் பிராட்மன் 20 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவுத்திரேலிய அணி 186 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை நிறுத்தி இருந்தது.

போட்டியின் நடுவே ஆடுகளத்தின் நீளம் குறைவாக இருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. ஆடுகளத்தை அளந்து பார்த்த போது 22 யார்ட்(yard) இருக்க வேண்டிய ஆடுகளத்தின் நீளம் 20 (yard) யார்ட்களாக இருந்தது.

ஆடுகளத்தின் நீளம் சரிசெய்யப்பட்டாலும் அதற்கு முன்னதாகவே பிராட்மன் ஆட்டமிழந்திருந்தார்.

முதல்தர டெஸ்ட் போட்டிகளில் 117 சதங்களுடன் 28000 ஓட்டங்களை 95 என்ற சராசரியில் அடித்திருக்கும் பிராட்மன் ஆசிய ஆடுகளங்களிலும் இதே திறமையை வெளிப்படுத்தக் கூடியவரா என்ற கேள்வி எழும் போதெல்லாம் சரவணமுத்து மைதானத்தில் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும், ஆடுகளம் 20 (yard) யார்ட்களாக அமைக்கப்பட்டிருந்ததும், அந்த ஆடுகளத்தைத் தயார்ப் படுத்தியவர் மேரி அம்மா என்பதும், அவரே முதல் பெண் ஆடுகள பராமரிப்பாளர் என்பதும் சொல்லப்படும் விடயமாக இருக்கின்றது.

பல கிரிக்கெட் வர்ணனைகளில் இந்த விடயம் சொல்லப்பட்டிருக்கின்றது. மேரி அம்மாவுக்கு பின் அவரது புதல்வி இன்னாசி அம்மா ஆடுகள பராமரிப்பாராக பணியாற்றி இருக்கின்றார். இவருக்குப் பின்னர் 1980 களில் அமராவதி என்ற பெண் சரவணமுத்து மைதானத்தில் ஆடுகள பராமரிப்பாளராக பணியாற்றி உள்ளார்.

1982 இல் சிறிலங்காவுக்கு 5 நாள் போட்டி அந்தஸ்து கிடைத்து முதல் போட்டியை சரவணமுத்து மைதானத்தில் விளையாடியது. அந்த போட்டிக்கு ஆடுகளத்தை தயார் செய்யும் வேலையை அமராவதி செய்திருந்தார். அவருக்கு பின்னர் அவரின் சகோதரி சரோயாவதியும் ஆடுகள பராமரிப்பாளராக வேலை செய்துள்ளார்.

சரோயாவதி அவர்கள் அண்மைக்காலம் வரையிலும் சரவணமுத்து மைதான ஆடுகள பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

சரவணமுத்து மைதானம் 1983 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாதிகளின் வன்செயல்களின் போது சேதப்படுத்தப்பட்டிருந்தது. பிரித்தானிய ஆட்சி இந்தியாவில் இந்து, இசுலாம் மதங்களை அடிப்படையாக கொண்டு கிரிக்கெட் கழகங்கள் அமைக்கப்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டிருந்தது.

அதை அடியொற்றி இலங்கையிலும் இனகுழுமங்களுக்காக விளையாட்டு கழகங்கள் உருவானது. தமிழர்கள் தமிழ் யுனியன் கழகத்தையும், சிங்களவர்கள் SSC எனப்படும் சிங்கள விளையாட்டு கழகத்தையும் உருவாக்கி இருந்தார்கள்.

இலங்கையில் குடியேறிய ஐரோப்பிய ஆண்கள் உள்நாட்டில் திருமண தொடர்புகளை ஏற்படுத்தியதால் தோற்றுவித்த பரங்கியர்கள் ,பேர்கர் ரிகிரியேசன்சு விளையாட்டு கழகத்தையும், ஐரோப்பியர்களைப் போலவே வர்த்தக நடவடிக்கைகளுக்காகக் கொழும்பில் குடியேறி இருந்த அராபியர்கள் (தமிழ் – சிங்கள இசுலாமியர்கள் அல்ல) மூர்சு விளையாட்டு கழகத்தையும் அமைத்துக் கொண்டார்கள்.

பொன்னம்பலம், குமாரசுவாமி போன்ற தமிழ் அதிகாரதரப்பு குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் தோற்றுவிக்கப்பட்டதே தமிழ் யுனியன் கழகம்.

1983 வரை தமிழர்களின் கழகமாகத் தான் இருந்து வந்தது. 1983 இல் சிங்கள பேரினவாதிகளின் வன்செயல்களின் பின்னர் அனைத்து கழகங்களும் சிங்களவர்களும், எப்போதாவது ஒரிரு தமிழர்களும் விளையாடும் கழகங்களாகி விட்டன.

தமிழ் யுனியன் கழகம் உட்பட மேற்கூறிய கழகங்கள் இப்போதும் இருக்கின்றன. அண்மையில் உள்ளுர் போட்டிகளில் தமிழ் யுனியன் கழகம் வாகை சூடியிருந்தது.

தற்போது சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கு விளையாடும் தனஞ்சய டீ சில்வா, சுரங்க லக்மால் போன்றவர்கள் தமிழ் யுனியன் கழகத்துக்காக விளையாடுபவர்கள் தான்.

OLYMPUS DIGITAL CAMERA

2009 யுத்தத்துக்கு பின்னர் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பேரைத் தமிழ் யுனியன் கழகத்தில் விளையாடுவதற்காக இணைத்து விட்டிருந்தார்கள்.

ஆனால், சிறிலங்கா அணிக்குத் தேர்வாகும் வீரர்கள் விளையாடக் கூடிய கழகமாகி இருக்கும் தமிழ் யுனியன் அணியில் அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. பின்னர் அந்த இருவரும் இரண்டாம் தர கழக அணிகளுக்காக விளையாட சென்று விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

எழுதியவர் -எட்வேர்ட்