ஆப்கானிஸ்தானை அலறவிட்ட இலங்கை -பழிக்குப் பழி தீர்த்தது…!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை, தற்போது சூப்பர் 4 சுற்று தொடங்கியதன் மூலம் மிகவும் சூடுபிடித்துள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் சுப்பர் 4 சுற்று இன்று ஆரம்பமானது. முதல் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அவமானகரமான தோல்வியின் வலியை இன்று  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த இலங்கை அணியால் துடைக்க முடிந்தது.

 


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர், ஆப்கானிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்திருந்தார்.

அதன்படி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. இறுதி 5 ஓவர்களில் அந்த அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.

ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மானுல்லா குர்பாஸ் 45 பந்துகளில் 84 குவித்தார். இப்ராஹிம் சத்ரான் 40 ஓட்டங்களைப் பெற முடிந்தது.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி 176 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இலங்கை அணி 19.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 179 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் இன்னிங்ஸின் அதிகபட்ச ஓட்டமாக குசல் மெண்டிஸ் 19 பந்துகளில் 36 ஓட்டங்களையும், பதும் நிஸ்ஸங்க 19 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றனர். தனுஷ்க குணதிலக்க 33 ஓட்டங்களையும், கடைசி ஓவர்களில் அதிவிரைவு இன்னிங்ஸைத் ஆடிய பானுக ராஜபக்ஷ 14 பந்துகளில் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கடந்த போட்டியில் பங்களாதேஷ் அணிக்கெதிராக 184 ஓட்டங்களை சேசிங் செய்த இலங்கை ,அணி இன்றைய போட்டியில் 176 ஓட்டங்களை பெற்று அபார வெற்றியை பதிவு செய்தது.

கடந்த போட்டியில் டுபாய் மைதானத்தில் சேசிங்கின் போது பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டு எண்ணிக்கை எனும் சாதனையை தனதாக்கிய இலங்கை ,இன்று சார்ஜா மைதானத்தில் அதிக ஓட்ட எண்ணிக்கையை பெற்று வரலாறு படைத்தது.

ஆசியக் கிண்ணத்தில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் உயரிய சாதனைகளை நிலைநாட்டி இலங்கை நம்பிக்கை கொடுத்துள்ளமை சிறப்பம்சமாகும் .

 

எமது YouTube தளத்துக்கு செல்லுங்கள் ?