ஆப்கானிஸ்தான் கிரிக்கட் சபைக்குள் ஆயுதக்களுடன் தலிபான்கள்- முன்னாள் கிரிக்கட் வீரரும் ஒருவர்..?

ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் (ACB) தலைமையகத்தில் இருப்பது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அணிக்காக  2 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல்லா மசாரியும் அங்கே உடனிருக்கும்  படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படங்களில், ACB தலைமையகத்தின் மாநாட்டு மண்டபத்தை அதிக ஆயுதங்களுடன் தலிபான்கள் ஆக்கிரமித்திருப்பதைக் காணலாம். தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு நாட்டில் கிரிக்கெட்டின் தலைவிதி என்னவாகும் என்பது எல்லோருக்குமான பெருத்த சந்தேகம்.

தலிபான் தீவிரவாத அமைப்பு முன்பு ஆட்சியில் இருந்தபோது கிரிக்கெட்டை தடை செய்தது.

ஏசிபி தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி அரசியல் குழப்பங்களால் நாட்டில் கிரிக்கெட் நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த புகைப்படம் வெளிவந்துள்ளது.

தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர். அவர்கள் எங்கள் நடவடிக்கைகளில் தலையிடவில்லை என  ACB தலைமை நிர்வாக அதிகாரின்வாரி தெரிவித்தார்்.

எவ்வாறாயினும், இப்போது எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது மற்றும் நாட்டில் கிரிக்கெட்டின் தலைவிதி ஆட்சியாளர்களின் ஒரே முடிவைப் பொறுத்தது என்பதே உண்மையான விடயமாகும்.

இன்று முன்னதாக, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என்று ACB உறுதி செய்தது.

“ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாட விரைவில் இலங்கை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று ஏசிபி ஒரு சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றதாலும், தலிபான்கள் நாட்டின் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாலும் ஆப்கானிஸ்தானில் தற்போது நிலைமை குழப்பமாக உள்ளது. குடிமக்கள் நாட்டை விட்டு தப்பிக்க முயலும் பல நெஞ்சை உலுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

 நாடு குழப்பத்தில் உள்ளது, குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிறார்கள், வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.

‘எங்களை குழப்பத்தில் விடாதீர்கள். ஆப்கானியர்களை கொல்வதையும் ஆப்கானிஸ்தானை அழிப்பதையும் நிறுத்துங்கள். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். ’ என கோரிக்கை விடுத்திருந்தார்.

இப்படியான நிலமைகளுக்கு மத்தியிலேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைக்குள் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் பலவித கேள்விகளை ரசிகர்கள் மனதில் தோற்றுவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேசப் போட்டிகளிலும் அல்லது உலக டுவென்டி டுவென்டி தொடரில் பங்கெடுப்பது எதுவிதமான சிக்கலும் ஏற்படாது எனவும் தாலிபான்கள் அதற்கு தடை விதிக்கமாட்டார்கள் எனவும் நம்பப்படுகிறது.