ஆப்கானிஸ்தான் கிரிக்கட்டில் அட்டகாசம் புரியும் தலிபான்கள்..!

ஆப்கன் கிரிக்கெட் வாரிய CEO வை அலுவலகத்துக்கே வந்து பதவி நீக்கம் செய்த தலிபான் அமைப்பினர்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரியை நீக்கியுள்ளனர் தலிபான்கள் கூட்டாளிகளான ஹக்கானிகள். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று 20 ஆண்டு கால ஜனநாயக ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. அதன்பின்னர் அங்கு தலிபான்கள் இடைக்கால ஆட்சி அமைத்துள்ளனர்.

தலிபான்களின் முந்தைய ஆட்சியின் போது சினிமா, விளையாட்டு போன்ற எந்த ஒரு கேளிக்கைக்கும் அனுமதி கிடையாது. அதேபோல் இந்த முறையும் தலிபான்கள் பல்வேறு கெடுபிடிகளைப் படிப்படியாக விதிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி ஹமீது ஷின்வாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹக்கானிகள் இதனைச் செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டது தொடர்பாக ஹமீது ஷின்வாரி அவரே தனது பேஸ்புக் பக்கத்தில், தலிபான்களின் கூட்டாளிகளான ஹக்கானி அமைப்பைச் சேர்ந்த அனாஸ் ஹக்கானி கிரிக்கெட் வாரியத்துக்கு வருகை தந்தார். அவர் என்னிடம், இனிமேல் நான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி இல்லை என்று கூறிச் சென்றார் எனப் பதிவிட்டிருந்தார். ஆனால், சில மணி நேரத்திலேயே இந்த பேஸ்புக் பதிவு அழிக்கப்பட்டது. பின்னர் அந்த பேஸ்புக் பக்கமே முடக்கப்பட்டது.

ஆப்கன் கிரிக்கெட் வாரியத் தலைவரை அலுவலகத்துக்கே வந்து எச்சரித்துச் சென்ற அனாஸ் ஹக்கானி, உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானியின் இளைய சகோதரர்.

இதற்கிடையில் ஆப்கன் கிரிக்கெட் வாரியத் தலைவராக இனி நஸீபுல்லா ஹக்கானி என்ற நஸீப் கான் நியமிக்கப்படுவதாக ஹக்கானி குழுமம் அறிவித்துள்ளது. நஸீபுல்லா முதுகலை பட்டம் பெற்றவர், கிரிக்கெட் பற்றியும் அறிந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஆப்கானிஸ்தானில் ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்ப தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை பிடித்து ஆட்சியமைத்துள்ளனர். அவர்கள் பெண்களுக்கான உரிமைகளை பறித்து வருகின்றனர். பெண்கள் விளையாட்டில் சேரக்கூடாது, பள்ளிக்கு செல்லக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறியவர்கள், ஆண்கள் என அனைவரும் போட்டியை நேரில் பார்த்து ரசிக்கிறார்கள். ஐ.பி.எல் போட்டிகள் என்றாலே விசில், ஆட்டம் இல்லாமல் இருக்காது.

உற்சாகத்திலும், தங்களுடைய அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும் பெண்களும் ஆட்டம் போடுவார்கள். ஏற்கனவே பெண்களுக்கு எதிரான முடிவகளை எடுத்து வரும் தலிபான்கள், பெண்கள் போட்டியை பார்ப்பதாலும் ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஐ.பி.எல். போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என்று ஊடகங்களுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

#AJ ABDH