இங்கிலாந்து அணி மீது கேப்டன் ரூட் அதிருப்தி

Australia vs England: 4 வருஷமா செஞ்ச தப்பையே திரும்ப திரும்ப பண்றோம்.! இங்கி., அணி மீது கேப்டன் ரூட் அதிருப்தி

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஆஷஸ் தொடர் என்பது உலக கோப்பையை போல முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் இரு அணிகளும் வெறித்தனமாக விளையாடும்.
ஆனால் இந்த ஆஷஸ் தொடரை பார்க்கையில், இங்கிலாந்து அணி அப்படி வெற்றி வேட்கையுடன் விளையாடுவதாக தெரியவில்லை.பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பி, 2 டெஸ்ட்டிலுமே படுதோல்வி அடைந்திருக்கிறது.

பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 2-0 என பின்னடைவை சந்தித்துள்ளது. 2 டெஸ்ட்டிலுமே பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து விதத்திலும் இங்கிலாந்தின் ஆட்டம் மோசமாக இருந்தது.

அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய 2 முக்கியமான பவுலர்கள் ஆடவில்லை. அப்படியிருந்தும் கூட, முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கும் 2வது இன்னிங்ஸில் வெறும் 192 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில், ஜோஸ் பட்லர் மட்டும் ஒருமுனையில் நங்கூரமிட்டு ஆட்டத்தை டிரா செய்ய போராடினார். 200க்கும் அதிகமான பந்துகளை பேட்டிங் ஆடி போராடி பார்த்தார். ஆனால் டீ பிரேக்கிற்கு பிறகு 9வது விக்கெட்டாக அவர் ஆட்டமிழக்க, எஞ்சிய ஒரு விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

கம்மின்ஸ், ஹேசில்வுட் இல்லாத குறையே தெரியாத அளவிற்கு ஸ்டார்க், ரிச்சர்ட்ஸன், மைக்கேல் நெசெர் ஆகிய மூவரும் அபாரமாக பந்துவீசினர். சொந்த மண்ணில் இந்தியாவிடம் தோல்விகளை அடைந்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிலும் ஆஷஸ் தொடரில் படுதோல்விகளை சந்தித்துவருகிறது. பேட்டிங்கை பொறுத்தமடில் அந்த அணியை ரூட் மட்டுமே தனி நபராக தாங்குகிறார். மற்றவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிங்ஸில் ஆடுகின்றனரே தவிர, அனைவரும் இணைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை.

இந்நிலையில், 2வது டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தனது அணியினரின் மோசமான ஆட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய ஜோ ரூட், பவுலிங்கை பொறுத்தமட்டில் நாங்கள் நல்ல லெந்த்தில் வீசியிருக்க வேண்டும். அதாவது இன்னும் கொஞ்சம் ஃபுல் லெந்த்தில் வீசியிருக்க வேண்டும். 2வது இன்னிங்ஸில் அதை செய்தோம். அதனால் தான் ஆஸ்திரேலியாவை சுருட்ட முடிந்தது. 4 ஆண்டுகளுக்கு முன் செய்த தவறுகளை திரும்ப திரும்ப செய்வது வருத்தமளிக்கிறது. பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்

. இங்கு (ஆஸ்திரேலியாவில்) ஜெயிப்பதற்கு தேவையான அனைத்தும் எங்களிடம் இருப்பதை நான் உறுதியாக நம்புகிறேன். செய்த தவறுகளையே திரும்பத்திரும்ப செய்வதை நிறுத்தினால் போதும்.
ஜோஸ் பட்லர் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது. அதுமாதிரியான ஆட்டிடியூட் தான் அணிக்கு தேவை. தோல்விகளில் இருந்து கற்ற பாடங்களின் வாயிலாக, செய்த தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் ஜெயிப்போம் என்று ஜோ ரூட் நம்பிக்கை தெரிவித்தார்.

#ABDH