இங்கிலாந்து பறக்கத் தயாராகும் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ்…!
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கு முன்னர் இந்திய அணியில் ஏற்பட்டிருக்கின்ற உபாதைகள் காரணமாக மாற்று வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டிய கட்டாயமான நிலமை இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சுப்மான் கில் உபாதை காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாட முடியாமல் இந்தியா திரும்பியிருக்கிறார்.
இது மாத்திரமல்லாமல் பயிற்சிப் போட்டிகளில் விளையாடிய போது அவேஸ் கான், மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் உபாதை ஏற்பட்டிருக்கிறது.
ஆக மொத்தத்தில் இங்கிலாந்து சென்ற 24 வீரர்களில் 3 வீரர்கள் உபாதைகளால் போட்டிகளில் விளையாட முடியாதளவிற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள், இதனால் மூன்று வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டிய தேவை இந்திய தேர்வுக் குழுவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதன் அடிப்படையில் இந்திய அணியில் இணைவதற்காக இலங்கை தொடரில் இணைந்து கொண்டிருக்கும் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோர் தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அது மாத்திரமல்லாமல் சகலதுறை ஆட்டக்காரர் ஜெயந்த் யாதவ் இங்கிலாந்து நோக்கிப் புறப்பட இருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்திய தேர்வு குழு இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.