இங்கிலாந்து பலமான கம்பேக், முதல் நாளிலேயே இந்தியாவிற்கு தோல்வி உறுதி, 3 வது டெஸ்டை கோட்டைவிட்ட இந்தியா..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகிறது.

லோர்ட்ஸ் மைதானத்தில் 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றதால் தொடரை வெற்றிகொள்ளும் நம்பிக்கை ரசிகர்கள் அதிகமானவர்களுக்கு இருந்தது.

முதல் நாளிலேயே இந்தியாவை மூச்சுவிட விடாமல் 78 ஓட்டங்களுக்குள் முடித்துக்கட்டி, விக்கட் இழப்பின்றி 120 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்ட இங்கிலாந்து, இந்த போட்டியின் வெற்றியை முதல் நாளிலேயே உறுதிப் படுத்தியுள்ளது.

முன்னதாக லீட்ஸ் மைதானத்தில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியாவை வெறுமனே 78 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க செய்து, போட்டியில் முதல் நாளிலேயே வெற்றி நமதே என்பதை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பறை சாற்றியிருக்கின்றனர்்.

ரோகித் சர்மா 19 ஓட்டங்களையும், ரஹானே 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர், மற்றவர்கள் அனைவரும் தொலைபேசி இலக்கங்கள் போல் ஒற்றை இலக்கங்களில் நடையை கட்டினர்.

 ஒரு கட்டத்தில் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் தள்ளாடிய இந்திய அணி, பின்னர் 67 ஓட்டங்களை பெற்றபோது 9 விக்கெட்டுகள் இழந்து அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இறுதியில் 78 ஓட்டங்களுக்கு இந்தியா சகல விக்கட்டுக்களையும் இழந்தது. 41-வது ஓவரில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது.

முதல்நாள் நிறைவில் இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஹசீப் ஹமீட் ,ரோரி பேர்ன்ஸ் இருவரும் அரைச்சதம் அடித்து இங்கிலாந்துக்கு விக்கெட் இழப்பின்றி 120 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இந்தியாவை விடவும் இங்கிலாந்து 42 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கும் நிலையில், முதல் நாளிலேயே  இந்தியாவுக்கான தோல்வியை இங்கிலாந்து உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த போட்டியில் மேலதிகமாக இங்கிலாந்து அணி 200 ஓட்டங்களை பெற்றுக் கொண்டாலும்கூட,  போட்டியில் அவர்களால் வெற்றியை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ஏனென்றால் இந்தியாவின் துடுப்பாட்டம் இருக்கும் நிலையில் 2-வது இன்னிங்சில் இந்தியா குறைந்தது 400 க்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றால் மட்டுமே இந்த போட்டியில் ஓரளவிற்காவது விறுவிறுப்பு தன்மையை கொண்டு வர முடியும் என்கின்ற நிலைமை தொடர்கிறது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது தவறான தீர்மானம் எனவும் கருத்துக்கள் பரவ ஆரம்பித்துள்ளன .

கோலி மேற்கொண்ட தவறான தீர்மானமே இந்தியாவின் இந்த சரிவுக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

காத்திருப்பு தொடரும்.