இது எப்படி உருப்பிடும்.. பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகில் Timed out..களத்திற்கு வராமல் தூங்கியதால் அவுட்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறி அந்த நாட்டு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இதன் காரணமாக 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி தொடரை பாகிஸ்தான் நடத்தினாலும் அந்தக் போட்டியை பார்க்க அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்திற்கு கூட வரவில்லை.
பாகிஸ்தான் வீரர்கள் மீது அவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் ரசிகர்கள் இவ்வளவு கோபத்தில் இருந்தால் அவர்களுடைய நம்பிக்கையை பெற மற்ற நாட்டு அணி வீரர்கள் கடுமையாக முயற்சி செய்து போராடுவார்கள்.
ஆனால் பாகிஸ்தானில் நடந்தது மிகப்பெரிய உச்சபட்ச காமெடி ஆகும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி வெளியேறிய நிலையில் தற்போது அங்கு உள்ளூர் போட்டி நடைபெற்று வருகிறது. இது பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய சவுத் சக்கில் இந்த தொடரில் விளையாடினார்.
நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக அரை சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகில். இந்த சூழலில் சவுத் ஷகில், ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். பிடிவி அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சவுத் சக்கில் களத்திற்கு வரவில்லை. மூன்று நிமிடங்கள் ஆகியும் சவுத் சக்கில் களத்திற்கு வராததால் பிடிவி அணி கேப்டன் நடுவரிடம் அவுட் கேட்டார்.
இதை அடுத்து நடுவர் ஷவுத் சக்கிலுக்கு அவுட் கொடுத்து விட்டார். இந்த நிலையில் போட்டியின் போது சவுத் ஷக்கில் படுத்து தூங்கி விட்டதால் பேட்டிங் செய்ய அவரால் வர முடியவில்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டிலே முதல் முறையாக டைம்ட் டவுட் ஆனார் வீரர் என்ற சோகமான சாதனையை சவுத் சக்கில் படைத்திருக்கிறார்.
பாகிஸ்தான் அணி தற்போது தொடர் தோல்விகளால் தடுமாறி வரும் நிலையில், சவுத் சக்கில் களத்திற்கு வராமல் படுத்து தூங்கிய சம்பவம் பாகிஸ்தான் ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இந்த போட்டியில் முஹம்மது ஷாசாத் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சவுத் ஷகில் பேட்டிங் செய்ய வராமல் தூங்கியதால் அவருடைய அணி 205 ரன்களில் ஆட்டம் இழந்தது.
ஒரு விக்கெட் விழுந்த பிறகு களத்திற்கு இரண்டு நிமிடத்திற்குள் புது பேட்ஸ்மேன் வந்து பேட்டிங் செய்ய தயாராகவில்லை என்றால் அவருக்கு டைம்ட் அவுட் என்ற முறையில் அவுட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 உலக கோப்பை போட்டியில் இலங்கை வீரர் மேத்தியூஸ் இவ்வாறு ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.