இந்தியாவின் தோல்விக்கான காரணம்..!

நேற்று நடந்தது டி20 போட்டியாக இருந்தால் இலங்கை அணி வென்றால் கூட பெரிய விஷயம் கிடையாது. ஆனால் 50 ஓவர் போட்டி எனும் பொழுது, இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல்.ராகுல் ஸ்ரேயாஸ், கில் என பேட்டிங் யூனிட் இருக்கும் பொழுது, டார்கெட் 230 எனும் பொழுது போட்டியை வென்றிருக்க வேண்டும். டை என்பது இலங்கை அணியின் தற்போதைய நிலைக்கு பெரிய விஷயம்தான். நிச்சயம் அவர்களுக்கு இது நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும்.

அடுத்து பந்து திரும்பும் மற்றும் மெதுவான ஆடுகளத்தில் அதற்கான பேட்டிங் ஒழுக்கத்தோடு இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடினார்களா? என்றால், ஸ்ரேயாஸ் தவிர மற்றவர்கள் விக்கெட்டை கொடுத்துதான் சென்றார்கள்.

அதிரடியாக அரைசதம் அடித்திருந்த ரோகித் சர்மாவே லென்த்தை தவறாகக் கணித்துதான் ஆட்டம் இழந்தார். ஒருபுறம் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார் என்றால் இன்னொரு முனையில் இருந்து இன்னிங்சை மொத்தமாகக் கட்டுப்படுத்தி எடுத்துச் செல்வது போல 50க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் கில் விளையாடினார். அப்படியென்றால் அதைக் கடைசிவரை செய்ய வேண்டாமா? அப்படியான ஒரு ஆடுகளத்தில் அந்த கத்தி ஷாட் மோசமான அணுகுமுறை.

இதையேதான் கேஎல்.ராகுலும் செய்தார். விராட் கோலி லெக் ஸ்பின் மற்றும் லெப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னில் தனக்கிருக்கும் வழக்கமான பலவீனத்தில் மிடில் அண்ட் லெக் ஸ்டெம்ப் லைனில் விழுந்தார். அவரை விக்கெட் கீப்பர் மற்றும் ஸ்லீப் மூலம் கேட்ச் எடுப்பது மாதிரியான திட்டங்களை இந்த ஸ்பின்னர்கள் எப்பொழுதோ விட்டுவிட்டார்கள் போல!

பந்து தேய்ந்ததற்குப் பிறகு சுழல் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்திற்குள் வந்துவிடுவார்கள் என்று தெரியும் என்று ரோகித் சர்மா போட்டிக்குப் பின் பேசியிருந்தார். கொழும்பின் அந்த ஆடுகளத்தின் தன்மை அவர்களுக்கு மட்டும் அல்லாமல் கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரிந்ததுதான்.

இப்படி இருக்கும் பொழுது என்ன மாதிரியான பேட்டிங் ஒழுக்கம் வெளிப்பட்டது? என்றால் அது மிகச் சுமாராகவே இருந்தது. அர்ஸ்தீப் சிங் கேம் அவர்னஸ் பற்றி தனியாகவே பேசலாம். ஆனால் நேற்றைய போட்டியின் முடிவுக்குக் காரணம் அவர் கிடையாது. முதலில் அவர் ஆட வந்திருக்கவே கூடாது. பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்திற்குரிய பேட்டிங் ஒழுக்கத்தைப் பின்பற்றி இருந்தால், போட்டியை வென்றிருக்கலாம். மேலும் இலங்கை அணிக்கு எதிராக 49.5 ஓவரில் வெற்றி பெற்றாலும் கூட அது அவமானம் எல்லாம் கிடையாது. வெற்றி வெற்றிதான். அப்படி சூழ்நிலைக்கும் எதிரணிக்கும் மதிப்பளித்து விளையாடாதது போல்தான் தெரிந்தது.

இதையெல்லாம் தாண்டி போட்டியின் இரண்டாவது பகுதியில் பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் முதல் பகுதியை விட கொஞ்சம் நன்றாக மாறி இருந்தது என்பதுதான் விஷயமே!

Richards