இந்தியாவின் வெற்றியை பறித்த மழை ஐந்தாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது…!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் 5ம் நாள் முழுவதும் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டு டிரா ஆனது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 183 ரன்கள் எடுத்து சுருண்டது.

இந்தியா 278 ரன்கள் குவித்தது. 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (109) சதத்தால் 303 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து ஒட்டுமொத்தமாக 208 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால் இந்தியாவுக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இந்தியா நேற்றைய 4-வதுநாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது.

இன்றைய கடைசி நாளில் 9 விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில், 157 ரன்கள் அடித்தால் வெற்றியை ருசிக்கலாம் என்ற கனவில் இந்தியா களம் இறங்க இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காலையில் இருந்து நாட்டிங்காமில் மழை பெய்து வருகிறது.

ஆகவே போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகாவது விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஆனால் தேநீர் இடைவேளை வரை போட்டி தொடங்கப்படவில்லை.

இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மங்கியது. மழை விட்டுவிட்டு பெய்ய ஆரம்பித்ததால், போட்டியை தொடங்குவதற்கான அறிகுறி தென்படவில்லை. இறுதியாக கடைசி நாள் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது.

ஐசிசி வேர்ல்டு டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி தொடரின் இரண்டாவது அத்தியாயத்தின் முதலாவது போட்டி Draw வாக நிறைவுக்கு வந்த நிலையில் இரண்டு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டன.

இரண்டாவது போட்டி லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

#ABDH