இந்தியாவிற்கு என்னவானது ? முதல் நாளிலேயே சுருட்டி எடுத்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ..!

இந்தியாவிற்கு என்னவானது ? முதல் நாளிலேயே சுருட்டி எடுத்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகிறது.

லோர்ட்ஸ் மைதானத்தில் 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றதால் தொடரை வெற்றிகொள்ளும் நம்பிக்கை ரசிகர்கள் அதிகமானவர்களுக்கு இருந்தது.

ஆனால் மிகப்பெரிய பதிலடியை இங்கிலாந்து கொடுத்திருக்கிறது, லீட்ஸ் மைதானத்தில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியாவை வெறுமனே 78 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க செய்து போட்டியில் முதல் நாளிலேயே வெற்றி நமதே என்பதை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பறை சாற்றியிருக்கின்றனர்்.

ரோகித் சர்மா 19 ஓட்டங்களையும், ரஹானே 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர், மற்றவர்கள் அனைவரும் தொலைபேசி இலக்கங்கள் போல் ஒற்றை இலக்கங்களில் நடையை கட்டினர்.

 ஒரு கட்டத்தில் இந்தியா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது, அதன்பின்னர் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் தள்ளாடிய இந்திய அணி, பின்னர் 67 ஓட்டங்களை பெற்றபோது 9 விக்கெட்டுகள் இழந்து அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இறுதியில் இசாந்த் சர்மா , சிராஜ் இணைப்பாட்டம் ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க 78 ஓட்டங்களுக்கு இந்தியா சகல விக்கட்டுக்களையும் இழந்தது. 41-வது ஓவரில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து குறைந்தது 200 ஓட்டங்களையாவது இங்கிலாந்து பெற்றுக்கொள்ளுமாக இருந்தால் இந்தியாவுக்கு பலத்த நெருக்கடியை கொடுத்து போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்வதற்கான ஏதுநிலைகள் அதிகம் உருவாகும் என நம்பப்படுகிறது.

இந்தியத் துடுப்பாட்ட வீரர்களின் அசமந்த தனமான துடுப்பாட்டம் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.