இந்தியாவுக்காக இளையோர் உலக கிண்ணம் வெற்றிகொண்டு கொடுத்த தலைவர்கள்…!

இந்தியாவுக்காக இளையோர் உலக கிண்ணம் வெற்றிகொண்டு கொடுத்த தலைவர்கள்…!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண தொடர் வரலாற்றில் முதல் முறையாக கடந்த 1998ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் இந்த உலக கிண்ண தொடரில் இதுவரை 13 தொடர்கள் நடைபெற்று முடிந்துள்ளன.

14வது முறையாக மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்த உலக கிண்ண தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அசத்திய இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

இன்றைய வெற்றியுடன் சேர்த்து உலகக் கிண்ண வரலாற்றில் அதிக பட்சமாக இந்தியா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணியாக விளங்குகிறது. ஆஸ்திரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன. தென்ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 1 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

இந்தநிலையில் அதிக தடவைகள் சாம்பியன் மகுடம் சூடிய அணியான இந்தியாவுக்காக மகுடம் வென்று கொடுத்த தலைவர்கள் விபரம்.

1. மொஹமட் கைஃப் (2000):

கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 3வது அண்டர் 19 உலக கோப்பையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அசத்திய முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி பின்னர் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது.

2. விராட் கோலி (2008) :

தற்போதைய இந்திய அணியின் முதுகெலும்பு வீரராக வலம் வரும் விராட் கோலி கடந்த 2008ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த அண்டர் 19 உலக கோப்பையை 2வது முறையாக இந்தியாவிற்கு வென்று கொடுத்தார்.

3. உன்முக்த் சந்த் (2012):

ஆஸ்திரேலியாவில் நடந்த 2012 ஐசிசி அண்டர் 19 உலக கோப்பையை அப்போதைய கேப்டனாக இருந்த உன்முக்த் சந்த் வென்று கொடுத்தார் . ஏனெனில் அந்த உலகக் கோப்பையில் ஆரம்பம் முதல் அசத்தி வந்த இந்தியா இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர் கொண்டது.

4. பிரிதிவி ஷா (2018):

நியூஸிலாந்து மண்ணில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த இந்த உலக கோப்பையில் லீக் சுற்றில் அசத்திய இந்தியா நாக்-அவுட் சுற்றில் அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த உலகக் கோப்பையில் ஜாம்பவான் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக செயல்பட கேப்டன் பிரிதிவி ஷா இந்தியாவை வழிநடத்தி கோப்பையை வென்று காட்டினார்.

5.யாஷ் துல்- (2022)

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற இளையோர் உலக கிண்ண போட்டிகளில் இந்திய இளையோர் அணியை கிண்ணம் வெற்றிகொள்ள வாய்த்த டெல்லி மைந்தன். இவர் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் விதம் அதிகமாக பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.