இந்தியாவுக்கு இளையோர் உலக கிண்ணம் வெற்றிகொண்டு கொடுத்த தலைவர் திடீர் ஓய்வு..!

இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த உன்முக் சந்த்

இந்தியாவில் ஏராளமான திறமைசாலிகள் இருந்தாலும், அணியில் 11 பேர் மட்டுமே ஆடமுடியும். அதனால் நிறைய திறமையான வீரர்களுக்கு இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

அந்தமாதிரியான வீரர்களில் ஒருவர் தான் உன்முக்த் சந்த். 2012ம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன். அந்த உலக கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 111* ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து, கோப்பையை வென்று கொடுத்தார்.

அதன்பின்னர் இந்தியா ஏ அணியில் ஆடிய உன்முக்த் சந்த், 2015 வரை இந்தியா ஏ அணியின் கேப்டனாகவும் இருந்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2014 டி20 உலக கோப்பை ஆகிய ஐசிசி தொடர்களுக்கான 30 வீரர்களை கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்த உன்முக்த் சந்துக்கு இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணியில் தற்போது மிகக்கடும் போட்டி நிலவுவதால் இனிமேல் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்த உன்முக்த் சந்த், வெளிநாட்டு அணிகளுக்காக ஆட ஏதுவாக இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். 28 வயதான உன்முக்த் சந்த் இன்று இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். அவர் அமெரிக்கா அணிக்காக ஆடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களான ஸ்மித் பட்டேல், ஹர்மீத் சிங் ஆகியோர் ஏற்கனவே அமெரிக்க அணிக்காக விளையாட அங்கு சென்றுவிட்டனர்.

இவர்களை எல்லாம் பாகிஸ்தான் அணிக்காக ஆடிய வீரரான சமி அஸ்லாம்  ஒருங்கிணைத்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

67 முதல்தரப் போட்டிகளில் விளையாடிய உன்முக் சந்த் 3,379 ரன்கள் குவித்துள்ளார். A தரக் கிரி்க்கெட்டில் 120 போட்டிகளில் 4,505 ரன்களும், 77 T20 போட்டிகளில் 1,565 ரன்களும் சேர்த்துள்ளார்.

உன்முக்த் சந்த் ஐபிஎல்லில் 21 போட்டிகளில் ஆடி 300 ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் எதிர்கால தலைவர் எனவும் எதிர்கால கோலி எனவும் அழைக்கப்பட்ட உண்முக்ட் சந்த் திடீரென கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தமை ஏமாற்றமே.

2012ஆம் ஆண்டு இந்தியாவிற்கு இளையோர் உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்து வீரர்கள் எவரும் இந்திய தேசிய அணியில் வாய்ப்பை பெறவில்லை என்பதும், அவர்கள் பிரகாசிக்காமலேயே மறைந்து விட்டார்கள் என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.

சந்தீப் ஷர்மா மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய வீரர்களைத் தவிர, வேறெந்த வீரர்களும் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஆக மொத்தத்தில் அதிர்ஷ்டமற்ற ஓரணியாக 2012 இல் உலக கிண்ணப் வென்ற இந்திய இளைஞர் அணி காணப்படுகிறது, அதன் தலைவரும் அடையாளம் இல்லாமலே இப்போது இந்திய கிரிக்கெட்டுக்கு ஓய்வு கொடுத்து இருக்கிறார்.

#ABDH