இந்தியாவுக்கு எதிராக அசத்திய கீகன் பீட்டர்சனுக்கு நியூசிலாந்து தொடரில் இடமில்லை
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவில நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா அணி தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்று அசத்தியது தென்ஆப்பிரிக்கா.
அதற்கு முக்கிய காரணம் கீகன் பீட்டரிசன் பேட்டிங்கே. அவர் ஆறு இன்னிங்சில் 276 ரன்கள் அடித்தார். சராசரி 46 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கீகன் பீட்டர்சன் இடம் பெறவில்லை.
அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும், அறிகுறி ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக ஜுபாய் ஹம்சா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கிறிஸ்ட்சர்ச்சில் நடக்கிறது. முதல் போட்டி வரும் 17-ந்தேதி தொடங்கும் நிலையில், 2-வது போட்டி 27-ந்தேதி தொடங்குகிறது
#Abdh