இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பிரபல தெ.ஆ. வேகப்பந்து வீச்சாளர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பிரபல தெ.ஆ. வேகப்பந்து வீச்சாளர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா விலகியுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. தெ.ஆ. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் டி20 தொடா் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட விராட் கோலி, டெஸ்ட் அணியின் கேப்டனாக நீடிக்கிறாா். டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோஹித் சா்மா, காயத்தால் இடம் பெறவில்லை. கே.எல். ராகுல் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டார்கள். பிறகு மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் காயம் காரணமாக பிரபல தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 28 வயது நோர்கியா, 12 டெஸ்டுகள், 12 ஒருநாள், 16 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

#ABDH