இந்தியாவுக்கு மட்டும் தனி ரூல்ஸா.. ஜெய் ஷா செய்ததை ஏற்கவே முடியாது.. பொங்கிய பாகிஸ்தான் ரசிகர்கள்

இந்தியாவுக்கு மட்டும் தனி ரூல்ஸா.. ஜெய் ஷா செய்ததை ஏற்கவே முடியாது.. பொங்கிய பாகிஸ்தான் ரசிகர்கள்

சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜெய் ஷா, இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய பின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் தலைவராக இருக்கும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட அணியின் வெற்றியை கொண்டாடுவது பாரபட்சமாகும் என அவர்கள் குறை கூறி வருகின்றனர்.

இந்த விமர்சனத்திற்கு மற்றொரு காரணமும் உள்ளது. பாகிஸ்தான் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்து இருக்கிறது. அதற்கும் ஜெய் ஷா தான் காரணம் என புகார் கூறி வருகின்றனர்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் ஏற்று நடத்துவதாக இருந்தது. பாகிஸ்தானில் பாதுகாப்புச் சிக்கல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின் நடந்த பேச்சு வார்த்தையில், இனி இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடும் கிரிக்கெட் தொடர்கள் பொதுவான ஒரு நாட்டில் நடத்தப்படும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை அடுத்து இந்திய அணி ஆடும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாயில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்திய அணி தனது குரூப் சுற்று போட்டிகள் மூன்றையும் துபாயில் விளையாடியது. அரையிறுதி போட்டியையும் துபாயில் விளையாடியது. இந்திய அணி அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், அந்த இறுதிப்போட்டியும் துபாயில் தான் நடைபெறும் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

அதன்படி தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அதனால் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்து இருக்கிறது. இந்த இழப்பால் பாகிஸ்தான் ரசிகர்கள் ஜெய் ஷா திட்டமிட்டு பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை முழுமையாக நடத்த முடியாதபடி செய்துவிட்டார் என புகார் கூறி வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க, ஜெய் ஷா இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியை நேரில் கண்டுகளித்தார். அவர் இந்திய அணி வெற்றியை நெருங்கிய போது உற்சாகத்தின் மிகுதியில் இருந்தார். ஹர்திக் பாண்டியா சிக்ஸர்களை அடித்த போது அவர் பந்தை கேட்ச் பிடித்து அதை வீசி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து இந்திய அணி வெற்றி பெற்றவுடன் அருகில் இருந்தவர்களிடம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் ஜெய் ஷா. அடுத்து விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருதை வழங்கியபோதும் உற்சாகத்தில் இருந்தார். இதையெல்லாம் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் ரசிகர்கள் தற்போது ஐசிசி தலைவராக இருக்கும் ஜெய் ஷா தனது நாட்டை சேர்ந்த அணிக்கு ஆதரவாக, பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், இந்திய அணிக்கு சாதகமாக அவர்கள் அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் ஆடுவதற்கு ஏற்றபடி திட்டமிட்டு கொடுத்ததாகவும் குறை கூறுகின்றனர். ஆனால் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பும் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎன்னடா வயசாகுது உனக்கு.. வெறும் 13 இன்னிங்ஸில் சாதித்த ரச்சின் ரவீந்திரா.. 5வது சதம் விளாசி சம்பவம்!
Next articleஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது 🇮🇳🏆