இந்தியாவுடனான முதலாவது போட்டியில் சத்தமேயில்லாமல் புதிய சாதனை படைத்திருக்கும் இலங்கை…!

  1. இந்தியாவுடனான முதலாவது போட்டியில் சத்தமேயில்லாமல் புதிய சாதனை படைத்திருக்கும் இலங்கை…!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

இன்று(20) இரண்டாவது போட்டி ஆரம்பமாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை தனதாக்கி, பல சாதனைகளைப் படைத்தது.

இலங்கை கிரிக்கெட் அணியும்  சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்திருக்கிறது என்பதை பலர் மறந்து இருக்கிறார்கள்.

இலங்கையின் எந்த ஒரு துடுப்பாட்ட வீரரும் அரைச்சதம் அடிக்காமல், அதிக ஓட்ட எண்ணிக்கையை ஒருநாள் போட்டிகளில் பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறது.

இலங்கை அணி மொத்தம் 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, இதில் இலங்கையின் வீரர்கள் எவரும் அரைச் சதம் அடிக்கவில்லை, அதுமட்டுமல்லாமல் அரைச்சத இணைப்பாட்டமும் எந்தவொரு ஜோடியும் எடுக்கவில்லை என்பதும் அரிதாக இருக்கிறது.

எந்த ஒரு வீரரும் 50+ அடிக்காமலே 250 க்கும் அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட அணிகள் வரிசையில் முதலிடத்தை பிடித்தது இலங்கை அணி.

தோல்வியை பெற்றுக் கொண்டாலும் சாதனை புத்தகத்தில் தன் பெயரையும் இந்த அரிய சாதனை மூலமாய் இலங்கை படைத்திருக்கிறது.