இந்தியாவை திணறடிக்கும் இங்கிலாந்து -சாதனை வெற்றியின் விளிம்பில்..!

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 146 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜானி பேர்ஸ்டோவ் சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

132 ரன்கள் முன்னிலை வகித்த இந்தியா, இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா 66 ரன்னும், ரிஷப் பண்ட் 57 ரன்னும் அடித்தனர். இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ், பிராட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராலி பொறுப்புடன் ஆடினர். லீஸ் அரை சதமடித்தார். அணியின் எண்ணிக்கை 107 ஆக இருந்தபோது கிராலி 46 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஒல்லி போப் டக் அவுட்டானார். தொடர்ந்து லீஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனால் இங்கிலாந்து 109 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. ஆனால் அடுத்து இறங்கிய ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. தொடர்ந்து அதிரடியிலும் மிரட்டியது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது.
ஜோ ரூட் 76 ரன்னும், பேர்ஸ்டோவ் 72 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 119 ரன்கள் தேவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.