இந்தியாவை திணறடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து …!

இந்தியா vs இங்கிலாந்து

முதலில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்!

விராட் கோலிக்குப் பிறகு ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிற்கு வந்ததும், இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியில் அவர் கொண்டுவந்த மிக முக்கிய மாற்றம், தைரியமாக எல்லா பேட்ஸ்மேன்களும் விளையாடுவது. இதற்கு ரோகித் சர்மா தன்னையே முன்னுதாரணமாகவும் மாற்றிக்கொண்டார். இதனால் அவரிடம் இருந்து பெரிய ரன்கள் வராமல், நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் வர ஆரம்பித்தது. ரோகித் சர்மாவை ஆதரித்ததற்கு முக்கியக் காரணம் இது!

இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு வரை, தைரியமாக தாக்கி ஆடும் அணுகுமுறையில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பித்து கடைசி பேட்ஸ்மேன் வரை விளையாடி, தைரியம் மற்றும் நம்பிக்கையை அணியின் கலாச்சாரமாக மாற்றி விட்டு, உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இருந்து, அந்த ஆட்ட அணுகுமுறைக்கு, அந்த அணி கலாச்சாரத்திற்கு எதிராக விளையாடினால் எப்படி பெரிய வெற்றிகள் வரும்?

மேலும் பேட்டிங் நீளத்தை அதிகரிப்பதற்காக, உலகக்கோப்பை தொடருக்கு முன்பு வரை அணியின் பிரதான சுழற் பந்துவீச்சாளராக இருந்த சாகலை வெளியில் வைத்து பவுலிங் ஆல் ரவுண்டர் அக்சர் மற்றும் அஸ்வினைக் கொண்டு வந்தும், துவக்கத்தில் இருவரில் ஒருவராவது தைரியமான அணுகுமுறையுடன் ஆட்டத்தை அணுகாதது பெரிய தப்பு. இப்படி ஒரு தப்பு நிகழ்ந்தது அழுத்தத்தைச் சரிவர மேலாண்மை செய்ய தெரியாததால்தான்!

தோல்விக்குப் பிறகு இன்று பேசிய ரோஹித் சர்மா ” நாங்கள் கொஞ்சம் பதட்டத்தில் இருந்தோம்” என்று கூறிவிட்டு, பேச்சில் பந்துவீச்சாளர்கள் பக்கம் திரும்பி ” அழுத்தத்தை கையாள தனிநபராக எல்லாம் யாருக்கும் கற்றுத் தர முடியாது” என்று கூறுகிறார். முதலில்
இவரே அழுத்தத்தைத் தாண்டவில்லை.

இந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியதற்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், டி20 கிரிக்கெட்டில் ஒரு துவக்க வீரராக கே.எல். ராகுலும் முக்கிய காரணம். இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் தவறு செய்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் முக்கியமான ஆட்டங்களில் சிறப்பாகவும் செயல்பட்டும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களிடமிருந்து வந்த சிறப்பான செயல்பாடு என்பது நெதர்லாந்து பங்களாதேஷ் ஜிம்பாப்வே அணிகளுடன் மட்டும்தான். மேலும் தங்களை மாற்றிக் கொண்டு தொடருக்குள் மீண்டு வர இவர்களுக்கு ஆட்டங்கள், வாய்ப்புகள் இருந்தும் மீண்டு வரவே இல்லை. எனவே இந்த வெளியேற்றத்துக்கு இவர்கள்தான் மிக முக்கியக் காரணம்!

இந்திய பந்துவீச்சாளர்கள் ஒரு அழுத்தம் மிகுந்த போட்டி என்றவுடன் திருவிழா டோர்னமெண்ட் பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ பரவாயில்லை எனும் நிலைக்கு வந்து விட்டார்கள். அடிலைடு மைதானத்தில் ஸ்விங் பெரிதாய் இருக்காது என்ற நிலையில், இன்று பந்து நல்ல விதமாகவே ஸ்விங் ஆனது. ஆனால் புவனேஸ்வர் குமார் சொந்த அணிக்கு எப்படி அழுத்தத்தில் தோல்வியை முதல் ஓவரிலேயே கொண்டு வந்து தரவேண்டும் என்பதற்கு உதாரணமாக பந்து வீசினார். முதல் ஓவரிலேயே கீப்பரை முன்னே வரவைத்து பின்பு பின்னே தள்ளி, இன்-ஸ்விங் பந்துகளுக்கு திணறும் பட்லருக்கு அவுட் ஸ்விங் பந்துகளை வீசி பவுண்டரிகள் கொடுத்து, தனது இரண்டாவது ஓவரிலேயே ஸ்விங் தேடாமல் நக்குல் வேரியேஷனுக்கு மாறி அலெக்ஸ் ஹேலஸை முதல் சிக்சர் அடிக்க வைத்து என அழுத்தத்தில் அமர்க்களப்படுத்தினார்!

உலகத்தில் உள்ள சிறந்த பேட்டிங் விக்கெட்டில் இந்த மைதானமும் ஒன்று என்றாலும், ரோகித் சர்மா பேட்டியில் கூறியிருந்ததை போல் 16 ஓவர்களுக்கு இந்த இலக்கை சேஸ் செய்யும் அளவுக்கு கிடையாது. இந்த வகையில் இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்களுக்கான அங்கீகாரத்தை கொடுத்தே ஆகவேண்டும். மிக மிகச் சிறப்பாக விளையாடினார்கள். எதிரணியினர் தவறு செய்திருந்தாலும், இப்படி ஒரு வெற்றி சிறப்பாகச் செயல்படாமல் வாய்ப்பே கிடையாது. அதேபோல் பந்துவீச்சிலும் தைரியமாக நேராக அடிப்பதற்கு அதிக பந்துகளை கொடுத்து, தாங்கள் கொண்டு வந்திருந்த திட்டத்தை முடிந்தவரை சிறப்பாக செயல்படுத்தினார்கள்!

இந்த வகையில் இந்த ஆட்டத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் இரு அணிகளும் மிக மிகத் தகுதியானது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணியின் இந்த மிகப்பெரிய வெற்றியைப் பார்த்து பாகிஸ்தான் அணி எந்தவித மனப் பின்னடைவையும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. அவர்களின் பந்துவீச்சுத் துறை மிகச் சிறப்பாக இருக்கிறது. மேலும் கடந்த சில ஆட்டங்களாக பாகிஸ்தான் அணி வீரர்களின் நம்பிக்கையும் மிகச் சிறப்பாக இருக்கிறது. இரண்டு அரை இறுதிபோல் ஒரு தலைப்பட்சமாக முடியாது என்று நம்புகிறேன். இறுதிப் போட்டியில் விளையாட இருக்கும் இரு அணிகளுக்கும் வாழ்த்துக்கள்!

✍️ Richards

எமது YouTube தளத்திற்கு 👇