“இந்தியா தான் ஜெயிக்கும் என சொல்லக்கூடாது” எச்சரித்த சுனில் கவாஸ்கர்.. என்ன காரணம்?
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துவரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் “இந்தியா தான் ஜெயிக்கும் என உறுதியாக கூறுவது தவறு” என கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி பலவீனமாகவும், இந்திய அணி பலம் வாய்ந்ததாகவும் வெளித்தோற்றத்தில் தெரிகிறது. ஆனால் அதை வைத்து மட்டுமே இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என சொல்லக் கூடாது என கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு சரிசமமாக வெற்றிகளை பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி சுனில் கவாஸ்கர் பேசுகையில், “இந்தப் போட்டியை மாற்றுவதற்கு ஒரு வீரர் மட்டுமே போதும் என்ற நிலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பாகிஸ்தானில் அது போன்ற வீரர்கள் பலர் உள்ளனர். எனவே, இந்தியா அணி தான் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என ஒட்டுமொத்தமாக கூறுவது தவறு.”
“இந்திய அணியில் அனைத்து விதங்களிலும் பலமான வீரர்கள் உள்ளனர். எனவே இந்திய அணி வெற்றி வாய்ப்பு உள்ள அணி என்று வேண்டுமானால் நாம் கூறலாம். இந்திய அணியை விட பாகிஸ்தான் அணிக்கு அதிக அழுத்தம் இருக்கிறது. அந்த அணி நியூசிலாந்து அணியிடம் தோற்று இருக்கிறது எனவும் நாம் கூறலாம். ஆனால் இந்த ஒரு தொடரில் (சாம்பியன்ஸ் டிராபி) தான் பாகிஸ்தான் இந்திய அணியை விட சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. எனவே அந்த ரெக்கார்டை அந்த அணி தக்க வைக்கும் முயற்சி செய்யும்” என்றார் கவாஸ்கர்.
மேலும் ஒரு ஆலோசனையும் அளித்திருக்கிறார் கவாஸ்கர். பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் ஓவரை ஹர்திக் பாண்டியா வீச வேண்டும் என்று கூறியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள், சுழற் பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்துவார்கள். அது போன்ற ஒரு திட்டத்தை இந்திய அணியில் அமல்படுத்த வேண்டும் என்றார். மேலும் வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் ஆட வைக்க வேண்டும் எனவும் கூறினார்.