இந்தியா – பாகிஸ்தான் 3 மேட்ச் ஆட திட்டம்.. பிசிசிஐ மெகா பிளான்.. இன்னும் 7 மாதங்களில் ஆசிய கோப்பை
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்து சில தினங்களே ஆகியிருக்கும் நிலையில், அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எப்போது மோத உள்ளன? என்பது பற்றி விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த முறை ஆசியக் கோப்பை டி20 வடிவில் நடைபெற உள்ளது. பிசிசிஐ-தான் இந்த முறை ஆசியக் கோப்பையை ஏற்று நடத்த உள்ளது. ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் இனி அந்த இரு நாடுகள் அல்லாது பொதுவான மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
அதனால், இந்த முறை ஆசியக் கோப்பையை பிசிசிஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அதிக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. அதாவது 2025 ஆசியக் கோப்பை தொடரை நடத்துவது பிசிசிஐ தான், ஆனால் அது இந்தியாவில் நடைபெறாது. மாறாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்.
அடுத்து, இந்த முறை எட்டு அணிகள் டி20 வடிவிலான ஆசியக் கோப்பையில் பங்கேற்க உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. நேபாள அணி இந்த முறை ஆசியக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை.
மொத்தம் 19 போட்டிகள் நடைபெற உள்ளன. முதலில், எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றுப் போட்டிகள் நடைபெறும். அதில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும். அதில், ரவுண்ட் ராபின் முறையில் ஒரு அணி மற்ற மூன்று அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாடும்.
அதன் முடிவில், சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் ஒரே பிரிவில் இடம் பெறும்.
அதன் மூலம், அந்த இரண்டு அணிகளும் குரூப் சுற்றில் ஒரு போட்டியில் மோதும் வாய்ப்பைப் பெறும். ஒருவேளை, அந்த இரண்டு அணிகளும் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறினால், அதிலும் மீண்டும் ஒரு போட்டியில் மோதும் வாய்ப்பைப் பெறும். சூப்பர் ஃபோர் சுற்றிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம் பிடித்தால், இறுதிப் போட்டியிலும் மோதும் வாய்ப்பும் கிடைக்கும்.
ஆக, 2025 ஆசியக் கோப்பையில் அதிகபட்சமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த இரண்டு அணிகளும் குரூப் சுற்று, சூப்பர் ஃபோர் சுற்று ஆகியவற்றில் முதல் இரண்டு இடங்களில் இடம் பிடித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். 2025 ஆசியக் கோப்பை தொடர் செப்டம்பர் இரண்டாவது வாரம் முதல் நான்காவது வாரம் வரை நடைபெற அதிக வாய்ப்புள்ளது. விரைவில், அதற்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இறுதி செய்யும் எனக் கூறப்படுகிறது.