இந்தியா vs தென் ஆப்பிரிக்கா -1st T20 போட்டி 👇

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

” பவர் பிளேவில் இந்திய பந்துவீச்சாளர்கள் இடம் விக்கெட்டுகளை விடாமல் இருப்பது முக்கியம். அவர்கள் பந்தை நன்றாக ஸ்விங் செய்வார்கள்”

போட்டிக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பில் தென்ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா சொன்னது இது!

அவர்கள் தெளிவான திட்டத்தோடுதான் இருந்தார்கள். ஆனால் ஒரு சிறந்த பந்து எந்தத் திட்டங்களையும் முறியடிக்கும். நேற்று ஒன்றுக்கும் மேற்பட்ட நல்ல பந்துகள் இந்திய பந்து வீச்சாளர்களிடமிருந்து விழுந்துவிட்டன.

பார்னல்- கேசவ மகராஜ் இருவரும் சேர்ந்து விளையாடும் பொழுது தென்ஆப்ரிக்க டக் அவுட்டில் ” ஸ்கோர் 120 வந்தால் போதும். இந்த விக்கெட்டில் போராடி விடலாம்” என்கின்ற ஏக்கமும் நம்பிக்கையும் இருந்ததை, அவர்கள் பவுண்டரிகளுக்கு கைத்தட்டி உற்சாகப்படுத்திய விதத்தில் தெரிந்தது. ஆனால் களத்தில் நின்றிருந்த பொழுது எய்டன் மார்க்ரம்முக்கு இந்த எண்ணம் உருவாகாமல் போனது துரதிஷ்டம். ஆடுகளத்திற்கு தேவையான ரன்களை முடிவு செய்வது, நாம் எவ்வாறு ஆட வேண்டும் என்பதை முடிவு செய்வதாகும்.

தீபக்-அர்ஸ்தீப் இருவரும் தங்களால் பந்தை இருபுறமும் காற்றில் திருப்ப முடியும் என்பதை காட்ட வேண்டும் என்பதற்காக வீசாமல், அதில் துல்லியத்தைக் காட்டினார்கள். அற்புதமான பந்துவீச்சு. ஆனால் பந்தில் ஸ்விங் முடிந்ததும், தீபக் ஒரு சராசரி பந்துவீச்சாளர் போல ஆகிவிடுவது கவலையான விஷயம். எந்த அளவிற்கு கடினமான பந்துகளை வீசுகிறார்களோ, அதே அளவில் சுலபமான பந்துகளும் வருகிறது. நேற்று களத்தில் ரோகித் சர்மாவின் சில சலிப்புகளுக்குக் காரணம் இதுதான். நல்ல பந்தை தொடர்ச்சியாக வீச வேண்டும். அதில் ரன்களை பேட்ஸ்மேன்கள் அடித்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. தவறும் பொழுது விக்கெட்டும் வரும். ஆனால் ஒரு சுலபமான பந்து விக்கெட் வாய்ப்பை 99% உருவாக்காது.

அஸ்வின் நேற்று தனது கடைசி ஓவரில் கூட ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு பந்தை காற்றில் ஆப் ஸ்பின்னாக பிளைட் செய்யாமல், கேரம் பந்துகளைதான் வீசினார். அவர் ரன்னை கட்டுப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவரால் அது முடியும் என்று காட்டினார். விக்கட்டுகளுக்கு போய் 10, 20 ரன்கள் சேர்த்து கொடுப்பது அந்த ஆடுகளத்தில் தனது அணி பேட்ஸ்மேன்களை கஷ்டப்படுத்தும் என்கின்ற புரிதல் அவரிடம் இருந்தது. அதே சமயத்தில் left-hand பேட்ஸ்மேனுக்கு பந்தை காற்றில் பிளைட் செய்தார். ஆனால் கடைசி ஓவரில் left-hand பேட்ஸ்மேனுக்கும் பிளாட்டராகவே உள்நோக்கி வீசினார். சந்தேகமே இல்லாமல் அஸ்வின் ஒரு மாஸ்டர்!

சூரியகுமார் தற்போதைய இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய சொத்து. எல்லா பேட்ஸ்மேன்களும் திணறிய ஒரு ஆடுகளத்தில் அவர் ஆடிய விதம், பந்தை கனெக்ட் செய்த விதம், அவரது தரத்தைக் காட்டியது. அவரது ஷாட் தேர்வு, துல்லியம், தைரியத்தில் இப்போது உலக கிரிக்கெட்டில் அவருக்குச் சமமாக எந்த பேட்ஸ்மேனும் இல்லை என்றே சொல்லலாம்.

கேஎல் ராகுல் விளையாடிய விதத்தில் கவலைப்பட ஏதுமில்லை. ஆடுகளம் எல்லோருக்கும் அப்படித்தான் இருந்தது. எல்லோரும் விக்கெட்டை முன்கூட்டியே இழந்துவிட்டதால் அவர்களின் தடுமாற்றம் முன்கூட்டியே முடிவுக்கு வந்துவிட்டது. ராகுல் நீண்ட நேரம் களத்தில் நின்றதால், அவரது தடுமாற்றம் பெரிதாய் வெளியே தெரிகிறது. நேற்று அந்த ஆடுகளத்தில் கேஎல் ராகுல் போல் ஒரு பேட்ஸ்மேன் தென்னாபிரிக்கா அணிக்கு நின்றிருந்தால் இன்று இந்தக் கட்டுரையில் நிறைய மாற்றங்கள் இருந்திருக்கும்!

இந்த போட்டி ஒரு விதிவிலக்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய போட்டி. இந்தப் போட்டியை வைத்து இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனத்தை கணிப்பது சரிவராது. ஆடுகளம் மற்றும் தட்பவெப்பநிலை பந்துவீச்சாளர்களுக்கு அதிகபட்ச சாதகத்தை கொடுத்தது. அடுத்து அங்கு இரண்டு நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு அணி வீரர்களுக்கும், இப்படி எல்லாம் ஒரே நாளில் மாறி நடக்கும் என்று தெரியாது. அப்படித்தான் அவர்களின் பயிற்சி நேரம் வேறுமாதிரியாக இருந்திருக்கிறது. இந்த காரணத்தால்தான் ஆடுகளத்தில் புற்களைப் பார்த்துமே தென்ஆப்பிரிக்க கேப்டன் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் போதும் என்று முடிவு செய்தது!

எத்தனை நாளைக்கு பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே ஆடுகளங்கள் தயாரிக்கப்படும்? இப்படியும் ஆடுகளங்கள் தயாரிக்கப்படட்டும். இந்த வகையில் இந்தப் போட்டி நல்லதொரு போட்டி!

✍️ Richards