இந்திய அணியுடன் செமி பைனலில் மோதப் போவது ஆஸ்திரேலியா-வா? சாம்பியன்ஸ் டிராபி புள்ளிப்பட்டியல்
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிராக அரையிறுதியில் விளையாடப் போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் மோதுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது. அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிராக எந்த அணி விளையாடும், அது எப்படி தீர்மானிக்கப்படும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தற்போது குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. ஆனால், எந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தையும், எந்த அணி இரண்டாவது இடத்தையும் பெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை. நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான குரூப் சுற்று போட்டி நடைபெற உள்ளது.
அந்தப் போட்டியில் இந்திய அணி வென்றால் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை பிடிக்கும். ஒருவேளை நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அந்த அணி குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும். அதே போல குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டாலும், அரை இறுதிக்கு முன்னேறப் போகும் மற்றொரு அணி எது? என்பது இன்னும் முடிவாகவில்லை.
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மூன்று புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் உள்ளன. ஆப்கானிஸ்தான் அணிக்கு இனி போட்டிகள் இல்லை. அந்த அணி தென்னாப்பிரிக்காவின் தோல்வியையும், நெட் ரன் ரேட்டையும் வைத்து அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும், நெட் ரன் ரேட் பாதாளத்தில் இருப்பதால் அதற்கான சாத்தியம் குறைவுதான்.
தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து அணியை வீழ்த்தினாலோ அல்லது தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தும், ஆப்கானிஸ்தான் அணியை விட அதிக நெட் ரன் ரேட் வைத்திருந்தாலோ அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் மிக மோசமாக இருப்பதால், தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.
ஆனால், குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தை பிடிக்குமா அல்லது இரண்டாவது இடத்தை பிடிக்குமா? என்பது இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகுதான் தெரிய வரும். இன்று நடக்கவுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் குரூப் பி புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பெறும்.
தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தால் இரண்டாவது இடத்தை பிடிக்கும். அப்போது ஆஸ்திரேலியா முதல் இடத்தை பிடித்திருக்கும். குரூப் ஏ பிரிவின் முதல் இடத்தை பிடித்த அணி, குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த அணியுடன் அரை இறுதியில் விளையாடும். அந்த வகையில் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்திருந்தால், குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த அணியுடன் அரையிறுதியில் விளையாடும்.
எனவே, குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தை பிடித்து, குரூப் ஏ பிரிவில் இந்தியா முதலிடத்தை பிடித்தால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும். இல்லை எனில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதியில் மோதும். இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் புள்ளி பட்டியலில் தங்களின் இடம் எது? என இன்னும் முடிவாகாத நிலையில் உள்ளன.