இந்திய அணி வீரர்களுக்கு கம்பீர் வார்னிங்.. ஒரு விஷயம் வெளியே போனாலும் காலி.. என்ன சொன்னார்?

இந்திய அணி வீரர்களுக்கு கம்பீர் வார்னிங்.. ஒரு விஷயம் வெளியே போனாலும் காலி.. என்ன சொன்னார்?

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க வேண்டி இந்திய அணி வீரர்கள் துபாய்க்கு கிளம்பிச் சென்றனர். மும்பையில் அனைத்து வீரர்களும் ஒன்றாக இணைந்து ஒரு ஹோட்டலில் தங்கினர். பின்னர் அங்கிருந்து அனைவரும் ஒன்றாக துபாய்க்கு கிளம்பிச் சென்றனர். அப்போது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் ஒரு அணி கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.

அந்தக் கூட்டத்தில் கவுதம் கம்பீர் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்து இருப்பதாக ரெவ்ஸ்போர்ட்ஸ் என்ற தளத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அணி வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது அணிக்குள் நடக்கும் எந்த ஒரு விவகாரத்தையும் பொதுவெளியில் வெளியிடக் கூடாது எனவும், கண்டிப்பாக ரகசியத்தைக் காக்க வேண்டும் எனவும் கூறியதாகத் தெரிகிறது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது இந்திய அணி விவகாரங்கள் ஊடகங்களில் வெளியாவதாக ஒரு சர்ச்சை வெடித்து இருந்தது. அதன் காரணமாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தற்போது இந்திய அணி வீரர்களுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறார். குறிப்பாக ஒரு சின்ன கிசுகிசு கூட வெளியே கசியக் கூடாது என அவர் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும் அந்தக் கூட்டத்தில் இந்திய அணி வீரர்கள் துபாய்க்குச் சென்று இறங்கியவுடன் ஞாயிறு அன்று மதியம் ஒரு மணி அளவில் பயிற்சியை துவக்கி விட வேண்டும் எனவும் கவுதம் கம்பீர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த தகவலும் வெளியே கசியக் கூடாது என கவுதம் கம்பீர் கூறிய தகவல் தற்போது வெளியே கசிந்து இருப்பது தான் பெரிய நகைச்சுவையாக உள்ளது.

இதற்கு முன் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது இளம் வீரர் சர்ஃபராஸ் கான் தான் ஊடகங்களுக்கு செய்தியை கசிய விட்டார் என கவுதம் கம்பீர் பிசிசிஐ அதிகாரிகளிடம் கூறியதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அப்போதும் கவுதம் கம்பீர் – பிசிசிஐ அதிகாரிகள் மத்தியில் நடந்த பேச்சு எப்படி ஊடகங்களுக்கு கசிந்தது? என்ற கேள்வி எழுந்தது. மீண்டும் கவுதம் கம்பீர் பேசிய விவகாரம் ஊடகங்களில் கசிந்து இருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டி பிப்ரவரி 20 அன்று நடைபெற உள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. அதற்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் ஒரு நாளைக் கூட வீணாக்காமல் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். பிப்ரவரி 20 அன்று வங்கதேச அணியை சந்திக்கும் இந்திய அணி, பிப்ரவரி 23 அன்று பாகிஸ்தான் அணியுடனும், மார்ச் 2 அன்று நியூசிலாந்து அணிகளுடனும் தனது குரூப் சுற்றுப் போட்டிகளில் விளையாட உள்ளது.

Previous articleலட்டுல வச்சனு நினைச்சியா தாஸ்!சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானை பழிவாங்கிய தென்னாப்பிரிக்கா
Next article“இந்தியா தான் ஜெயிக்கும் என சொல்லக்கூடாது” எச்சரித்த சுனில் கவாஸ்கர்.. என்ன காரணம்?