இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர் நியமனம்- அணி விபரம்..!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இப்போட்டிகள் முடிந்ததும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ருதுராஜ் ஐபிஎல்2021 சீசனில் 635 ரன்கள் குவித்ததற்காக ஆரஞ்சு தொப்பியை வென்றார். இதேபோல் விஜய் ஹசாரே டிராபி தொடரின் 5 போட்டிகளில் 4 சதம் உள்பட 603 ரன்கள் குவித்தார்.
ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் பகுதியின்போது வெங்கடேஷ் அய்யர் அபாரமாக விளையாடினார். விஜய் ஹசாரே டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக 379 ரன்கள் விளாசினார். மேலும் 6 போட்டிகளில் 9 விக்கெட் எடுத்துள்ளார். இதனால் இவர்களுக்கு தென் ஆப்பிரிக்க தொடரில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் 9 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கு திரும்பியுள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான அணி விவரம்: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சாஹல், அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.