இந்திய கால்பந்தாட்ட அணிக்கு அதிர்ச்சியை அரங்கேற்றிய இலங்கை கால்பந்து அணி..!
தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டிகள் இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன, மாலைதீவில் இடம்பெற்று வருகின்ற இந்த தெற்காசிய கால்பந்தாட்ட போட்டிகளில் இன்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த ஒரு போட்டி இடம்பெற்றது.
பலம் பொருந்திய இந்திய அணிக்கெதிராக இலங்கை கால்பந்தாட்ட அணி இன்றைய போட்டியை முகம் கொடுத்தது, கடந்த 2 ஆட்டங்களில் பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு அணிகளுக்கு எதிராக இலங்கை சிறப்பாக விளையாடினாலும் அவர்களால் வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியாது போனமை ஏமாற்றமே.
இன்றைய போட்டியில் தெற்காசியாவின் பலம்பொருந்திய கால்பந்து அணியாக இருக்கும் இந்திய அணிக்கு எதிராக கோல்கள் எதுவும் பெறப்படாத நிலையில் இரண்டு அணிகளும் போட்டியை 0-0 என முடித்துக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டக் கூடிய ஒரு விஷயம் எனலாம்.
தமது முதல் போட்டியில் பங்களாதேஷுடன் 1-1 என்ற சமநிலை முடிவைப் பெற்ற இந்திய அணி, இலங்கை அணியை வீழ்த்தி தமது முதல் வெற்றியை சுவைக்கும் நோக்குடனேயே களம் கண்டனர்.
உலக கால்பந்து தர வரிசையில் 105 வது இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு எதிராக, 215 வது இடத்தில் இருக்கும் இலங்கை அணி எதுவிதமான கோல்கள் அடிக்கவும் வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் இரு அணிகளும் கோல்களை பெற்றுக்கொள்ளாத நிலையில் நிறைவுக்கு வந்தது. மிகச்சிறப்பாக தடுப்பு ஆட்டம் ஆடிய டுக்சன் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கை கால்பந்து ரசிகர்கள் கொண்டாட கூடிய ஒரு மாபெரும் ஆட்டமாக இந்த ஆட்டம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.