இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு முறையும் சாதிய வேற்றுமையும் ஓர் விரிவான அலசல்…!

பிரித்வி ஷாவை புரிந்துகொள்வது எப்படி?

பிரித்வி ஷா ஒரு அபூர்வமான திறமையாளர்; இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவர்; அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்தவர்; மும்பையை சேர்ந்தவர். இப்படி சச்சினுக்கும் ஷாவுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உண்டு. ‘இந்திய மரபில் ஒரு ஹீரோவுக்கான லட்சணங்களில் முக்கியமானது பிறவி மேதமை. ஆனால் அதுமட்டுமே போதாது. அடுத்தடுத்து வரும் சோதனைகளை சமாளித்து இறுதியில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும். அவன்தான் உண்மையான ஹீரோ’ என்கிறார் வரலாற்றாய்வாளர் பிரசாந்த் கிடாம்பி.

பிரித்வி ஷாவின் தொடக்கம் பிரமாதமானது; சச்சினை நினைவுபடுத்தக் கூடியது. ஆனால் அவருடைய கிரிக்கெட் பயணம் சரியான திசையில் செல்லவில்லை. ஊக்க மருந்து சோதனையில் தோல்வி, தவறான பழக்க வழக்கங்கள், நிறுவனத்துடனான மோதல் போக்கு என்று ஆட்டத்தில் கவனம் தொலைத்தார். சொல்லப்போனால் ஷாவின் நடத்தை இன்னொரு இளம் மேதை, வினோத் காம்ப்ளியை நினைவுபடுத்தியது. காம்ப்ளி சச்சினுக்கு நிகரான திறமையாளர்; மும்பையை சேர்த்தவர்; இளம் மேதை. இருந்தும் சர்வதேச கிரிக்கெட்டில் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை.

 

ஷாவைப் போலவே காம்ப்ளியும் ஒரு ‘வெளியாள்’. கிரிக்கெட்டுக்காக மும்பையை நோக்கி வந்தவர்கள். , இந்தியாவுக்கு இதுவரை ஆடியுள்ள நான்கு தலித்களில் காம்ப்ளியும் ஒருவர். குற்றங்கள் அதிகம் நடக்கும் சேரி ஒன்றில் பிறந்தவர். காம்ப்ளிக்கு சாதித்தடை என்றால் பிரித்வி ஷாவுக்கு வர்க்கத்தடை. பிழைப்புக்காக பிஹாரில் இருந்து குடிபெயர்ந்த குடும்பத்தை சேர்ந்தவர்; சிறு வயதில் தாயை இழந்தவர். இந்திய கிரிக்கெட் அணித் தேர்வில் சாதி பார்க்கப்படுகிறதா? இந்தக் கேள்வி இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. ஆனால் இதற்கான பதில்களுக்கு ஒரு நிலையான உள்ளடக்கம் இல்லை ; அதன் தொனியும் கூட தனிநபர்களுக்கு ஏற்றபடி வளைக்கப்படுகிறது. சஞ்சு சாம்சன், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் இந்தச் சாதி சட்டகத்தில் பொருந்தி வருவர்; ஆனால் பிரித்வி ஷாவை எப்படிப் பொருத்துவது?

ஏன் பிரித்வி ஷா’க்கள் அணியுடன் ஒன்ற மறுக்கின்றனர்? நிறுவனத்துடன் மோதல் போக்கைக் கடைபிடிக்கின்றனர்? இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நமக்கு கொஞ்சம் திறந்த மனது தேவை. ஒரு கிரிக்கெட்டரின் ஆளுமை உருவாக்கத்தில் பல்வேறு அடுக்குகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயலாற்றுகின்றன ; சாதி, வர்க்கம் மட்டுமில்லாமல் அண்மையம் ( Proximity), முன்மாதிரி (Rolemodel) போன்றவையும் முக்கியப் பங்குவகிக்கின்றன. சமீபத்திய ஆஸ்திரேலிய – வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் தேஜ்நரைன் சந்தர்பால் அறிமுகமானார். அவர் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பாலின் மகன். அறிமுகத் தொடர் என்கிற பதட்டம் இல்லாமல் தேஜ்நரைன் சிறப்பாக ஆடினார். அதுவல்ல விஷயம் இங்கு. அவருடைய தொழில்நுட்பம் ஷிவ்நரைன் சந்தர்பாலை நகல் எடுத்தது போல இருந்தது. இது எப்படி சாத்தியமானது? ஒரே இரத்தம் என்பதாலா? அப்படி என்றால் அந்த தொழில்நுட்பம் சந்தர்பால் குடும்பத்தின் தனித்த உடைமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது உண்மையில் ரோஹன் கன்ஹாயிடம் இருந்து ஷிவ்நரைன் கற்றுக்கொண்டது.

லாய்ட், ரிச்சர்ட்ஸ் என எத்தனையோ நட்சத்திர வீரர்கள் இருக்க ஏன் சந்தர்பால், கன்ஹாயை தனது முன்மாதிரியாக கருதுகிறார்? இங்குதான் அண்மையம் ( Proximity) என்கிற காரணி எட்டிப்பார்கிறது. இரத்தம், சாதி, இனம் போன்றவற்றையும் ஏற்றிச் சொல்லம வாய்ப்புள்ளது என்றாலும் அடிப்படையில் இதன் பின்னுள்ளது அண்மையம் மட்டும்தான். உருவத்தில் தன்னைப் போல, தனதருகில் இருக்கும் ஒரு நட்சத்திர நாயகர் மீது எழும் பிரமிப்பு என்று புரிந்துகொள்ளலாம்.

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முப்பதாவது சதத்தை.ஸ்டீவ் ஸ்மித். பூர்த்திசெய்தார்; பிராட்மேனை பின்னுக்குத் தள்ளினார். அதாவது பிராட்மேன் போலவே ஆடி பிராட்மேனை பின்னுக்குத் தள்ளினார் என்றுதான் அர்த்தம். எவர் ஒருவருக்கும் அகப்படாத பிராட்மேனின் தொழில்நுட்பத்தை ஸ்மித் எப்படி கைகொண்டார்? இதற்கும் ஸ்மித் திட்டமிட்டெல்லாம் பிராட்மேன் பாணியை போலச் செய்யவில்லை. உண்மையில் அவருடைய இயல்பான பாணி அதுவல்ல. அதுவொரு ஆட்டத்தில் வேறு வழியே தெரியாமல் தேர்ந்தெடுத்த பாணி. A safety machanism! எப்படி இது சாத்தியமானது? மாயமா மந்திரமா?ஒன்றும் இல்லை. இதுவும் ஒருவகையில் அண்மையமே. அதற்கு ஸ்மித், பிராட்மேனை பார்த்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை; பிராட்மேன் கதைகளை கேட்டு வளர்ந்தாலே போதுமானது. இந்தியாவில் ஊரக/ கிராமப் பகுதிகளில் இருந்து ஏன் மட்டையாளர்கள் வருவதில்லை? அவர்களுக்கான ரோல் மாடல்கள் அங்கில்லை.

மீண்டும் பிரதான கேள்விக்கு திரும்புவோம். ஏன் பிரித்வி ஷா’க்கள் அணியுடன் ஒன்ற மறுக்கின்றனர்? விளிம்பில் இருந்து வருபவர்களுக்கு மைய நீரோட்டத்துடன் இணைவதில் ஒருவித தயக்கம் இருக்கும். அது ஒருகட்டத்தில் பாதுகாப்பின்மையாக விரியும். அடுத்தகட்டமாக மோதல் போக்காக முற்றும். இங்கு விளிம்பு என்பதன் வரையறைக்குள் பிராந்தியத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படி விரிக்கையில் அசாருத்தீன், ஶ்ரீசாந்த் ஆகியோரையும் உள்ளடக்கி விவாதிக்க முடியும். இது வெறுமனே சாதி சட்டகமாக மட்டும் இருக்குமானால் அசாருத்தீன், ஶ்ரீசாந்த் ஆகியோரின் பெயர்கள் அடுத்தடுத்து இடம்பெற முடியுமா?

இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். நம்பிக்கையில் ஒரு இஸ்லாமியர். இங்கிலாந்தின் சிறந்த கேப்டன்களில் ஹூசைன் ஒருவர் ; இன்று, பிரமாதமான வர்ணனையாளர். ஆனால் இங்கிலாந்து அணியில் அறிமுகமான காலத்தில் இருந்த நாசர் வேறு. தனது ஆட்டத்திறன் மீது அவருக்கு சந்தேகம் இருந்தது; கலாச்சார ரீதியாக அணியுடன் ஒட்டுவதில் சிக்கல் இருந்தது; பலவீனத்தை மறைக்கும் பொருட்டு நிறுவனத்தை எதிர்க்கும் புரட்சியாளர் வேடம் தரித்தார். நாசரின் பிரச்சினையை அன்றைய இங்கிலாந்து பயிற்சியாளர் டேவிட் ப்ரீத் புரிந்துகொண்டார். அணிக்கூட்டத்தில் நாசரின் திறமையை வெகுவாக புகழ்ந்தார்; ‘அணியின் வெற்றிக்கு நீ அவசியம்’ என்று தட்டிக்கொடுத்தார். நாசர் ஹூசைன் தனது சந்தேகக் கூட்டிலிருந்து வெளியே வந்தார். எல்லா நாசர்களுக்கும் டேவிட் ப்ரீத் போன்ற ஒருவர் பயிற்சியாளராக அமைந்துவிடுவதில்லை.

நாசர் ஹூசைன் ஒரு உதாரணம் மட்டுமே. தெ. ஆப்பிரிக்கர் – கெவின் பீட்டர்சன் – இங்கிலாந்து அணி, இந்து மதம் – டேனிஷ் கனெரியா – பாகிஸ்தான் அணி, பாகிஸ்தான் வம்சாவளி – உஸ்மான் கவாஜா – ஆஸ்திரேலிய அணி எனப் பல உதாரணங்களை வைத்து விவாதிக்க இடமுண்டு. இவர்கள் அனைவருக்கும் தத்தமது அணியுடன் இணைந்து செயல்படுவதில் ஏதோவொரு சிக்கல் இருந்தது/ இருக்கிறது. இந்த வரிசையில் வைத்துத்தான் வினோத் காம்ப்ளி, பிரித்வி ஷா போன்றவர்களை அணுகவேண்டும். பிசிசிஐ குளறுபடிகளை சாதியுடன் மட்டும் சேர்த்துப் புரிந்துகொள்வது பலன் தராது. மாறாக அது பிசிசிஐ–க்கு உதவுவதாகவே சென்று முடியும். அதற்கு சமீபத்திய உதாரணம் ‘பிரிண்ட்’ இணைய இதழில் வெளியான திலீப் மண்டலின் கட்டுரை. இந்திய அணியில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் முன்னெப்போதையும் விட அதிகளவில் இடம்பெறுகின்றனர்; குறிப்பாக யாதவ், படேல், ஹூடா, சஹால் போன்ற கால்நடை வளர்ப்பு சாதிகள் வாய்ப்பு பெறுகின்றனர் என்பது கட்டுரையின் சாராம்சம். நல்லது.

ஆனால் இதே திலீப் மண்டல்தான் முன்னர், சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டதை கண்டித்து #Casteist_BCCI என்று டிவீட் செய்தார். இப்போது எதை சரியென்று எடுத்துக்கொள்வது? இரு வாரங்களில் பிசிசிஐ சாதி வேற்றுமை பார்க்காத நிறுவனமாக மாறிவிட்டதா? அப்படியல்ல. திலீப் மண்டலின் கட்டுரை இடம்பெற்ற பிராமணர் அல்லாதாவர்களில் எத்தனை பேர் மட்டையாளர்கள் என்று பேசியிருக்க வேண்டும். வணிகம் இன்று சந்தையை தீர்மானிக்கிறது. நீண்ட காலத்துக்கு ஒரு திறமையாளரை வெளியில் வைத்துவிட முடியாது. இந்தியாவில் எத்தனையோ பிராந்தியங்கள் இன்றைக்கும் பிரதிநிதித்துவம் இன்றி தவிக்கின்றன. அதற்கு தீர்வு என்னவென்று பார்க்கவேண்டும். Batter/Bowler தேர்வில் மறைமுகமாக ஒரு வேலைப்பகுப்பு முறை காணப்படுகிறது. ஓபிசிக்களின் பேட்டிங் பிரதிநிதித்துவம் இப்போதுதான் அதிகரித்துள்ளது – அது T- கிரிக்கெட்டின் தாக்கத்தால் உண்டான பலன். அதை நீண்ட வடிவ ஆட்டங்களிலும் செயல்படுத்த திட்டங்கள் வகுக்க வேண்டும். தலித்துகளுக்கு அணியில் பிரதிநிதித்துவத்தை சாத்தியப்படுத்த வேண்டும். தெ. ஆப்பிரிக்காவில் இடஒதுக்கீடு முறை செயல்படுகிறது. ஆனால் அங்கு கறுப்பின வீரர்களின் இடங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து நிரப்பப்படுகின்றன. இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம், எல்லாத் தரப்பினரும் மட்டைப் பிடிப்பதற்கு என்று கீழ் மட்டத்தில் சில திட்டங்களை வகுத்துள்ளது. அது போன்ற ஒரு வழிமுறையை இந்தியாவும் பின்பற்றலாம்.

✍️ Dinesh Akira (India)

(Facebook தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது )