இந்திய கிரிக்கெட் அணியின் பிரச்சனை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருக்கிறது. இதற்கு அடுத்து இந்தப் பதிவில் இடம் பெறும் விஷயங்கள் எல்லோருக்கும் புரியும் என்பது உறுதி இல்லை என்று எனக்குத் தெரியும்!
இந்திய கிரிக்கெட் வாரியம் எப்பொழுதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தொழில்நுட்ப ரீதியாக பலமானவர்களையே தேடும். மாறாக ஆட்டத்திற்குள் ஆச்சரியங்களை நிகழ்த்தும் சாகச வீரர்களைத் தேடாது!
இதற்கு சம அளவிலான இரண்டு காரணங்கள் இருக்கிறது. இப்படியான வீரர்களை வைத்துக் கொண்டு ஒரு ஆண்டு என்ற அளவில் கணக்கில் எடுக்கும் பொழுது அதிக வெற்றிகளைப் பெற்று வணிக ரீதியாகப் பலனடைவது. அடுத்து இது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கலாச்சாரமாக மரபாக இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் இவர்கள் மினிமம் கேரண்டி என்ற அடிப்படையிலேயே தொடர்ந்து போவது. அல்லது இவர்கள் கொண்டு வருபவர்கள் எல்லாமே மினிமம் கேரண்டியை தரக்கூடியவர்களாக இருப்பது!
சிந்தனை ரீதியாக இப்படி இருக்கும் ஒரு அமைப்பில் வென்றவர்கள் யார் என்று பார்த்தால் மூன்றே பேர்தான். கபில்தேவ், கங்குலி, தோனி. ஆனால் இந்த மூன்று பேருமே இந்த அமைப்பின் சிந்தனைக்கு நேரெதிராக இருக்கக்கூடியவர்கள் என்பதுதான் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம்!
இந்த மூவரில் நமக்கு அதிகப்படியான பரிச்சயம் உள்ள கங்குலி மற்றும் தோனியை எடுத்துக் கொள்வோம். கங்குலி ஒரு முழுமையான இடது கை வீரர் கிடையாது. மகேந்திர சிங் தோனி பேட்டிங்கில் மட்டுமல்ல விக்கெட் கீப்பிங் கூட பாரம்பரியமான முறையில் செயல்படக் கூடியவர் கிடையாது.
இவர்கள் தங்களிடம் எது இல்லையோ அதற்கு மாற்றாக இன்னொன்றை பலமாக உருவாக்கிக் கொள்ளக் கூடியவர்கள். இதே சிந்தனையை அணிக்குள்ளும் கொண்டு வருபவர்கள். அணியில் என்ன இல்லை என்பது தெளிவான பின், எது வேண்டும்? எது கிடைக்கும்? இதை வைத்து என்ன செய்யலாம்? இல்லாததற்கு மாற்றாக எதை கொண்டு வரலாம்? என்று இயல்பாக சிந்தனைகள் பிறக்க விடையையும் கண்டறிந்து வெற்றி பெறக் கூடியவர்கள்!
மேலும் இவர்களது அணியில் தொழில்நுட்பம் என்கின்ற அடிப்படையில் மட்டுமே வீரர்களின் சேர்க்கை இருக்காது. வீரர்களின் தனித்திறமை என்கின்ற அளவிலும் சேர்க்கை இருக்கும். கங்குலி காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் யுவராஜ் சிங், ஜாகீர் கான், வீரேந்திர சேவாக் என்று தனிப்பட்டியல் நீளும். தோனியை எடுத்துக் கொண்டால் ஷார்ட் பந்தில் பெரும் பலவீனம் கொண்ட சுரேஷ் ரெய்னாதான் அவருடைய மறைமுக தளபதி!
இந்த இருவரும் தாங்கள் பாரம்பரிய முறையில் கிரிக்கெட் விளையாடக் கூடியவர்கள் கிடையாது, ஆனால் தங்களால் சிறப்பாக விளையாட முடியும், அதேபோல் தங்களைப் போல் உள்ள மற்றவர்களாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று உணர்ந்தவர்கள். இப்படி உணர்ந்ததை இவர்கள் செயல்படுத்துவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது, இவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள்.
இந்தக் காரணத்தால் தான் இவர்கள் தலைவர்கள் என்கின்ற அந்தஸ்தில் இருந்தார்கள். இவர்களிடமிருந்து அந்தக் காலகட்டத்தில் அதுவரை இந்திய அணி எட்டி இருக்காத உயரங்களை எட்டிக்கொள்ள முடிந்தது. இவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இவர்களிடமிருந்தும் எந்த நல்ல முடிவும் வந்திருக்காது. இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால் 2011 உலக கோப்பையின் போது தேர்வு குழு தலைவராக இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மனநிலைக்கு ஒப்பானவர் கிடையாது!
விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து ஓரம் கட்டுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பல காரணங்கள் இருந்தது. அதில் ஒரு காரணம் சரியானது மற்ற எல்லாமே தவறானது. நாம் இதற்குள் இப்போது போக வேண்டாம். அதில் முக்கிய நோக்கம் என்னவென்றால், தோனிக்கு பிறகு இன்னொருவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தைத் தன் சொல்படி ஆட்டுவிப்பவராக இருக்கக் கூடாது; இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு செயல்பட கூடியவராக இருக்க வேண்டும் என்பதுதான்.
தோனிக்கு பிறகு விராட் கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தோனியின் பாணியில்தான் சென்றார். தன் அணிக்கு பயிற்சியாளர் யாராக இருக்க வேண்டும் என்பது வரை தான் முடிவு செய்வேன் என்று மிகக் கறாராக நின்றார். இந்திய கிரிக்கெட் அணியை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் கோட் பாக்கெட்டில் வைத்துக்கொள்ள துடிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலியை பழி தீர்க்க எடுத்துக் கொண்டு வந்த ஆயுதம்தான் மிகப்பெரிய சுவாரசியமானது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிந்தனைக்கு எதிராக நின்ற கங்குலியையே ஆயுதம் ஆக்கியது. கங்குலியின் வெற்றிகளுக்கு அடிப்படையாக இருந்த ஈகோவை மிக அழகாகப் பயன்படுத்திக் கொண்டது. இதே போல் இதில் உள்ள இன்னொரு சுவாரசிய விஷயம், இந்திய கிரிக்கெட் வாரியத்தை விட விராட் கோலி மிக அதிகமாக பாரம்பரிய கிரிக்கெட்டின் மீது பிடிப்பை கொண்டவர் என்பதுதான்!
இப்பொழுது தேவை எளிய பின்புலத்திலிருந்து வருபவர்கள் என்று கிடையாது மாறாக வரையறைகளைத் தகர்த்தெறியும், எதையும் மோதிப் பார்க்கும், அணியில் இல்லாத ஒன்றை ஈடுகட்ட சரியான மாற்றைக் கண்டறியும், வீரர்களை சுய உத்வேகம் கொள்ள வைக்கும், எதற்கும் முன்னே நிற்கும் ஒரு தலைமைதான். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மொழியில் சொல்வதென்றால் அன்-ஆர்த்தடாக்ஸ் கேப்டன்!
✍Richards