இந்திய, பாகிஸ்தான் அணிகள் T20 உலக கிண்ணத்தில் ஒரே பிரிவில்- முழுமையான விபரம்…!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகளை பார்ப்பதற்கு காத்திருக்கும் ரசிகர்கள், டி20 உலகக் கிண்ணத்தில் இரு அணிகளும் ஒரே குழுவில் இணைக்கப்பட்டிருப்பதால் பெருமகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இதன்முலம் சூப்பர் 12 சுற்றில் இரு அண்டை நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை ரசிகர்கள் உறுதிசெய்கிறார்கள். அத்தோடு இந்த குழுவில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இன்னுமொரு குழுவில் இணைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் டி20 உலகக் கோப்பையில் ஒரு இடத்தைப் பெற இரண்டு டெஸ்ட் விளையாடும் நாடுகளான பங்களாதேஷ் மற்றும் இலங்கை தகுதிப் போட்டிகளில் விளையாடியே தேர்வாக வேண்டும் எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
அதன்படி குழு A இல் இலங்கை அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது, பங்களாதேஷ் குழு B இல் ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளை எதிர்கொள்ளும்.
இவை உலக T20 கிண்ண போட்டிகளுக்கு முன்னதான தகுதி போட்டிகளாகவே பார்க்கப்படும், ஏனென்றால் இந்த போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளே (இவ்விரு அணிகள்) பிரதான சுற்றில் விளையாடும் தகுதியை ஈட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2021 மார்ச் 20 ம் திகதி வரையான அணிகளின் டி20 தரவரிசைகளை கருத்தில் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. பங்களாதேஷ் மற்றும் இலங்கையைத் தவிர்த்து தரவரிசையில் 8 இடங்களுக்கு கீழே இருந்த காரணத்தாலேயே அந்த அணிகள் தகுதிச்ச சுற்றில் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் முதல் 8 தரவரிசை அணிகள் தகுதிகளைப் பெற்றன.
இந்த போட்டி அக்டோபர் 17 ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது, இறுதிப் போட்டி நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும். போட்டிகள் துபாயில் நான்கு இடங்களில் நடைபெறும்.
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியம், ஷார்ஜா ஸ்டேடியம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானம். துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மைதானங்கள் முக்கிய சுற்றுக்கு பயன்படுத்தப்படவுள்ள நிலையில், தகுதிப் போட்டிகள் ஓமானில் நடத்தப்படவுள்ளது.
முழுமையான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.