இந்திய மண்ணில் வரலாறு படைத்தது இங்கிலாந்து..!

இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் டொம் ஹார்ட்லியின் சிறப்பான பந்துவீச்சினால் சுற்றுலா இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் விலைமதிப்பற்ற வெற்றியை பதிவு செய்ய முடிந்தது.

அதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

ஆட்டத்தின் நான்காம் நாளான இன்று 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியால் 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ரோஹித் சர்மா 39 ரன்களில் ஆட்டமிழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களில் ஆட்டமிழந்தார், ஷுப்மான் கில் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. கே.எல்.ராகுல் 22  ரன்கள் எடுத்தார். 5-வது துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய அக்சர் படேல் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் ஐயர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா இரண்டு ரன்களில் ரன் அவுட் ஆனார்.

இன்னிங்ஸின் 7வது விக்கெட்டு 119 ஓட்டங்களில் வீழ்ந்த பின்னணியில், 8வது விக்கெட்டுக்காக 57 ஓட்டங்கள் (130) என்ற பெறுமதியான உறவை அமைத்து தனது அணிக்கு வெற்றியின் நம்பிக்கையை மீண்டும் கொண்டுவந்தார் எஸ்.பாரத் மற்றும் ஆர். அஸ்வின். இருவரும் தலா 28 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தனர்.

இந்திய இன்னிங்ஸின் 9வது விக்கெட் 177 ரன்களில் வீழ்ந்தது, அப்போது இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 54 ரன்கள் தேவைப்பட்டது.

மொஹமட் சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கடைசி விக்கெட்டுக்கு 25 ரன்கள் என்ற உறவை உருவாக்க முடிந்தது, ஆனால் சிராஜ் 12 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்து வெற்றி பெற்றது. பும்ரா 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பந்துவீச்சில் இந்தப் போட்டியில் அறிமுகமான டொம் ஹார்ட்லி 62 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்று ஆட்டம் தொடங்கும் போது, ​​தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் என்ற நிலையிலிருந்து, 420 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

அபார சதம் அடித்த ஒல்லி போப் 196 ரன்களில் ஆட்டமிழந்தார், 278 பந்துகளில் 21 பவுண்டரிகள் அடங்கும்.

பென் டக்கெட் 47 ரன்களிலும், சாக் குரோலி 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பென் ஃபாக்ஸ் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 34 ரன்களையும், ரெஹான் அஹமட் 28 ரன்களையும் பெற்றனர்.

இன்னிங்ஸின் 5வது விக்கெட்டு 163 ரன்களுக்கு வீழ்ந்ததன் பின்னணியில் ஃபாக்ஸ் மற்றும் போப் இடையே 6வது விக்கெட்டுக்கு 112 (183) ரன்களின் சிறப்பான பார்ட்னர்ஷிப் கட்டப்பட்டது. 7வது விக்கெட்டுக்கு போப் மற்றும் ரெஹான் இடையே 64 ரன் பார்ட்னர்ஷிப்பும், 8வது விக்கெட்டுக்கு போப் மற்றும் ஹார்ட்லி இடையே 80 ரன் பார்ட்னர்ஷிப்பும் கட்டப்பட்டது.

பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 126 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 88 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 பெற்றது. ரவீந்திர ஜடேஜா 87 ரன்களும், கேஎல் ராகுல் 86 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் ஜோ ரூட் 79 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், டொம் ஹார்ட்லி மற்றும் ரெஹான் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.