இந்திய வேகப்பந்து படையின் பிதாமகனாக புகழப்படும் கோலி – எப்படி இந்த ராட்சியத்தை கட்டமைத்தார் தைரியுமா ?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றி பக்கங்களைப் புரட்டினால் அதில் பெரும்பாலும் சுழல் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 3 இந்திய பவுலர்களாக அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய சுழல் பந்துவீச்சாளர்களை முதல் இடங்களில் இருப்பது அதற்கு சான்றாக உள்ளது.

இந்த சுழல் பந்துவீச்சு எனும் ஆயுதத்தை வைத்து இந்தியா உட்பட ஆசிய கண்டத்திற்கு உட்பட்ட நாடுகளில் மட்டுமே வெற்றிகளை பெற முடியும்,  சொந்த மண்ணில் வெற்றி பெறுவது என்பது ஒரு சாதாரண விஷயம்.

ஆசியாவுக்கு வெளியே வெற்றி பெற வேண்டுமென்றால் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும் என முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கூறுவார்.

ஆனால் வெளிநாட்டில் அந்த 20 விக்கெட்டுகளையும் சுழல் பந்துவீச்சை வைத்து எடுப்பது என்பது சாத்தியமற்றது.அதற்கான வேகப்பந்து படையை கட்டியெழுப்பிய பெருமை கோலியையே சாரும்.

வரலாற்றில் இதற்கு முன்பும் வெளிநாடுகளில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு ஜொலித்துள்ளது ஆனால் தொடர்ச்சியாக 20 விக்கெட்டுகளையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

அதை உணர்ந்த தற்போதைய கேப்டன் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற 2014 முதல் சுழல் பந்துவீச்சை அதிகமாக நம்பியிருக்கும் நிலைமையை மாற்ற வேண்டும் என எண்ணி வேகப்பந்து வீச்சு மீது அதிக நம்பிக்கை வைத்து அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

அதன் பலமாக சமீப வருடங்களாக தொடர்ச்சியாக எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து மட்டுமே இந்தியா எடுக்கத் தொடங்கியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் உதவியின்றி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகள் எடுத்த டெஸ்ட் போட்டிகளின் விபரம் :

1. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 20 விக்கெட்கள், ஜொஹனஸ்பர்க், 2018.

2. இங்கிலாந்துக்கு எதிராக, 20 விக்கெட்கள், நாட்டிங்காம், 2021.

3. இங்கிலாந்துக்கு எதிராக, 19 விக்கெட்கள், நாட்டிங்காம், 2018.

4. வங்கதேசத்திற்கு எதிராக, 19 விக்கெட்கள், கொல்கத்தா, 2019.

5. இங்கிலாந்துக்கு எதிராக, 19 விக்கெட்கள், லார்ட்ஸ், 2021.

இதில் கொல்கத்தா தவிர ஏனைய போட்டிகள் அனைத்தும் ஆசியாவுக்கு வெளியே நடைபெற்ற போட்டிகள் ஆகும், இந்த 5 போட்டிகளிலுமே விராட் கோலி தான் கேப்டன் என்பது ஆச்சரியப்பட வைக்கும் அம்சமாகும்.

மொத்தத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்போதுதான் முதல் முறையாக இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ், உமேஸ் யாதவ் போன்ற வீரர்களை அடங்கிய இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணி உலகத்தரம் வாய்ந்ததாக வளர்ந்துள்ளது.

விராட் கோலி நம்பிக்கை வைத்து ஊக்கப்படுத்திய வேகப்பந்து வீச்சு எனும் நெருப்பை வைத்து இனி வெளி நாடுகளில் இந்தியாவாலும் தொடர் வெற்றிகளை பெற முடியும் என நம்பலாம்.