இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!

இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன் அசத்தலாக பவுலிங் செய்துள்ளார்.

2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜனை தேர்வு செய்ய ஆர்வமாக இருந்ததாகவும், காயம் காரணமாக தேர்வு செய்ய முடியவில்லை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார். அதன்பின் மீண்டும் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கவில்லை.

டிஎன்பிஎல், ரஞ்சி டிராபி தொடரில் விளையாடினாலும் நடராஜன் பழைய ஃபார்முக்கு வரவில்லை. இதற்கு காலில் ஏற்பட்ட அவரது காயம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் நடராஜன் மீண்டும் தனது பவுலிங் ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக பார்க்கப்பட்டு வந்த நடராஜன், தற்போது பவர் பிளே ஓவர்களிலும் மிரட்டலான பவுலிங் செய்து வருகிறார். ஆர்சிபி அணி பேட்டிங்கின் போது 3 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்திருந்தது. உடனடியாக கேப்டன் கம்மின்ஸ், நடராஜனை அட்டாக்கில் கொண்டு வந்தார். முதல் பந்திலேயே விராட் கோலி பவுண்டரி அடித்தாலும், அடுத்த பந்திலேயே வேகத்தை குறைத்து நடராஜ்ச்ன் சுதாரித்து கொண்டார்.

தொடர்ந்து வேகத்தில் மாற்றம் செய்து அசத்தி வந்த நடராஜன், அந்த ஓவரின் 5வது பந்தை ஸ்லோ பவுன்சராக வீசி டூ பிளசிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து பவர் பிளேவிலேயே 2 ஓவர்களை வீசிய நடராஜன் வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்பின் நடராஜன் மீண்டும் டெத் ஓவர்களில் தான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.

18வது ஓவரை வீசிய நடராஜன் ஒரேயொரு பவுண்டரி உட்பட 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதேபோல் கடைசி ஓவரில் முதல் 2 பந்துகளிலேயே 10 ரன்களை விட்டுக் கொடுத்தாலும், அடுத்த 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதன் மூலமாக 4 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் பலரும் நடராஜனை டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.