இரட்டை சதம் விளாசிய லேதம்; ஃபாலோ ஆன் ஆன வங்கதேசம்
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது வங்கதேச அணி.
இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் ஞாயிறன்று தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லேதம் 186, கான்வே 99 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் டாம் லேதம் இரட்டைச் சதமும் கான்வே சதமும் அடித்து அசத்தினார்கள். கான்வே 109 ரன்களிலும் டாம் லேதம் 252 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். நியூசிலாந்து அணி 128.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதன்பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி, 41.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது.
இதில் அதிகபட்சமாக யாசிர் அலி 55 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும் டிம் செளதி 3 விக்கெட்டுகளையும் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நியூசி. கேப்டன் டாம் லேதம் வங்கதேச அணியை மீண்டும் பேட்டிங் செய்யச் சொல்வாரா அல்லது தனது அணியின் 2-வது இன்னிங்ஸைத் தொடர்வாரா என்பது இன்று தெரிய வரும்.