இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்த கோல் கிளேடியட்டர்ஸ்

இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்த கோல் கிளேடியட்டர்ஸ்

2021ஆம் ஆண்டுக்கான LPL தொடரில் 05ஆவது போட்டியாக கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் கண்டி வொரியர்ஸ் அணிகள் இடையிலான இன்றைய (07) போட்டி அமைந்திருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி வொரியர்ஸ் அணியின் தலைவரான அஞ்செலோ பெரேரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காகப் பெற்றிருந்தார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி வொரியர்ஸ் அணி LPL தொடரில் தமது முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்க, கோல் கிளேடியேட்டர்ஸ் அணி தொடரில் இரண்டாவது வெற்றிக்கான வேட்கையுடன் காணப்பட்டிருந்தது.

பின்னர் முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த கண்டி வொரியர்ஸ் அணி அதன் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான கென்னர் லூயிஸின் விக்கெட்டினை போட்டியின் இரண்டாவது பந்தில் பறிகொடுக்க, சமித் பட்டேலின் பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்திருந்த லூயிஸ் ஓட்டமேதுமின்றி ஓய்வறை நடந்தார்.
தொடர்ந்து புதிய வீரராக மைதானம் வந்த சரித் அசலன்கவும் வெறும் 06 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அஹ்மட் சேஷாத் – கமிந்து மெண்டிஸ் ஜோடி

பொறுப்பான முறையில் துடுப்பாடி 83 ஓட்டங்களை மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாகப் பகிர்ந்தது.
இந்த இணைப்பாட்டத்தின் முடிவாக கமிந்து மெண்டிஸின் விக்கெட் பறிபோயிருக்க, கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்கும் போது 25 பந்துகளில் 4 பௌண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

கமிந்து மெண்டிஸினை அடுத்து கோல் கிளேடியேட்டர்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த போதும் அஹ்மட் சேஷாத்தின் அரைச்சதம், திலகரட்ன சம்பத்தின் இறுதிநேர அதிரடி என்பன கைகொடுக்க கண்டி வொரியர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது.

கண்டி வொரியர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக இந்தப் பருவகாலத்தில் பெற்ற முதல் அரைச்சதத்துடன் அஹ்மட் சேஷாத் 51 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 56 ஓட்டங்கள் பெற, திலகரட்ன சம்பத் இறுதிவரை ஆட்டமிழக்காது 2 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 9 பந்துகளில் 19 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் சமிட் பட்டேல் மற்றும் தனன்ஞய லக்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 144 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய கோல் கிளேடியட்டர்ஸ் அணிக்கு, தனுஷ்க குணத்திலக்க – குசல் மெண்டிஸ் ஜோடி சிறந்த ஆரம்பம் ஒன்றினை வழங்கியது.
இரண்டு வீரர்களும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் முதல் விக்கெட்டுக்காக 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். அதனையடுத்து, கோல் கிளேடியட்டர்ஸ் அணியின் முதல் விக்கெட்டான குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடன் கமிந்து மெண்டிஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தார்.

எனினும் தனுஷ்க குணத்திலக்க தொடர்ச்சியாக கோல் கிளேடியட்டர்ஸ் அணிக்கு வலுச்சேர்த்தார். இந்நிலையில், கண்டி வொரியர்ஸ் அணியின் சுழல்பந்துவீச்சாளர்கள் கோல் கிளேடியட்டர்ஸ் அணிக்கு நெருக்கடி தர அவ்வணி தமது தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுக்கத் தொடங்கியது
.
அதன்படி அரைச்சதம் நெருங்கிய தனுஷ்க குணத்திலக்க, மொஹமட் ஹபீஸ், அணித்தலைவர் பானுக்க ராஜபக்ஷ என கோல் கிளேடியட்டர்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தார்.
எனினும் பின்னர் திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்திய லஹிரு மதுஷங்கவின் அதிரடியோடு கோல் கிளேடியட்டர்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களுடன் அடைந்தது
.
கோல் கிளேடியட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனுஷ்க குணத்திலக்க 33 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் எடுக்க, லஹிரு மதுசங்க 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி உடன் 22 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கண்டி வொரியர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சசிந்து கொலம்பகே 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் வெற்றியோடு கோல் கிளேடியேட்டர்ஸ் அணி LPL தொடரில் தமது இரண்டாவது வெற்றியினை பதிய, கண்டி வொரியர்ஸ் அணி இரண்டாவது தொடர் தோல்வியினைப் பெறுகின்றது.

#ABDH