இலங்கை அணியின் உண்மை நிலை இதுதான்_உரக்கச் சொன்ன முரளிதரன்…!

போட்டியில் வெற்றி பெறுவது எப்படி என்பதை பல ஆண்டுகளாக இலங்கை அணி மறந்துவி்ட்டது. தற்போது கடினமான காலகட்டத்தில் இலங்கை அணி இருக்கிறது என்று இலங்கையின் முன்னாள் வீரர் முரளிதரன் கடுமையாகச் சாடியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில 2-0 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

லெக்ஸ்பின்னர் ஹசரங்காவின் பந்துவீச்சுக்கு இந்திய வீரர்கள் திணறினர், 3விக்கெட்டுகளை இழந்தனர். ஹசரங்காவுக்கு ஓவரை விரைவாக முடித்துவிட்டு கடைசி நேரத்தில் ரன்களைக் கட்டுப்படுத்த பந்துவீச்சாளர் இல்லாமல் கேப்டன் சானக தடுமாறினார்.

ஹசரங்காவுக்கு 3 ஓவர்களை நிறுத்தி வைத்திருந்தால் கடைசி நேரத்தில் தீபக் சஹருக்கும், புவனேஷ்வருக்கும் கடும் நெருக்கடி அளித்திருக்கலாம். 275 ரன்கள் அடித்தும் அதை டிஃபென்ட் செய்ய முடியாமல் இலங்கை அணி வெற்றியைக் கோட்டைவிட்டது.

வெற்றியை கோட்டைவிட்டது குறித்து ஏற்கெனவே கேப்டன் சானகவுக்கும், பயிற்சியளர் ஆர்தருக்கும் இடையே களத்தில் வாக்குவாதம் நடந்தது.

இந்த சூழலில் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனும் இலங்கை அணியை வறுத்தெடுத்துள்ளார். அவர் Cricinfo தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இலங்கை அணிக்கு எவ்வாறு வெற்றி பெறுவது, வெற்றி பெறும் வழிகள், பல ஆண்டுகளாகவே மறந்துவிட்டது என நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். இலங்கை அணிக்கு இனிவரும்காலம் கடினமாக இருக்கும், ஏனென்றால், அவர்களுக்கு ஒரு போட்டியைக் கூட வெல்வது எவ்வாறு என்பது தெரிந்திருக்கவில்லை.

முன்பே நான் கூறியதுபோல், இலங்கை அணி முதல் 15 ஓவர்களில் இந்திய அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்திய அணி கடுமையாகத் திணறும். இந்த ஆட்டத்திலும் ரன் சேர்க்கத் திணறியது. ஆனால், தீபக் சஹர், புவனேஷ்வர் இருவரும் சேர்ந்து மிகப்பெரிய பணி செய்து வெற்றியை கொடுத்துள்ளார்கள்.

இலங்கை அணியினரும் சில தவறுகளைச் செய்தார்கள். லெக் ஸ்பின்னர் ஹசரங்காவை முழுமையாக பந்துவீச வைப்பதற்கு முன் அவருக்குசில ஓவர்களை நிறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்,கடைசி நேரத்தில் சில விக்கெட்டுகளை ஹசரங்கா வீழ்த்தியிருப்பார்.

புவனேஷ்வர் அல்லது சஹர் இருவரில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும், அடுத்துவரும் டெய்ல்எண்டர் பேட்ஸ்மேன்களால் ஒவருக்கு 8 முதல் 9 ரன்களை அடிக்க முடியாது. ரன் அடிக்கமுயற்சி செய்து தவறான ஷாட்களை ஆடுவார்கள், அனுபவமற்ற வீரர்களை வீழ்த்திவிடலாம்.

பயிற்சியாளர் ஆர்தர் அவசரப்படாமல் கோபப்படாமல் புதிய கேப்டன் சானகவுடன் பேசியிருக்க வேண்டும்.

அணி தோல்வி அடையும் போது பயிற்சியாளர் அமைதி காக்க வேண்டும். பயிற்சியாளரே தனது அதிருப்தியை வெளிப்படுத்தாமல் அமைதி காத்து, கேப்டனுக்கு எளிமையாக புரிய வைக்க வேண்டும்.

சிறந்த பந்துவீச்சாளரை அழைத்துப் பேசி அவரை விக்கெட் வீழ்த்த வைக்க வேண்டும், அதற்குப்பதிலாக கடைசிவரை ஆட்டத்தை இழுத்துச் செல்வது ஒருபோதும் பயனளிக்காது.

7 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார்கள், ஒருவிக்கெட்டை வீழ்த்தினால் ஆட்டமும் முடிவுக்குவரும். ஆனால், இலங்கை வீரர்களுக்கு வெற்றி பெறுவதற்கான வழி தெரியவில்லை. அவர்கள் மறந்துவிட்டார்கள். வெற்றிக்கான வழியில் வர இலங்கை அணிக்கு இது கடினமான காலம்

இ்வ்வாறு முரளிதரன் தெரிவித்தார்.

Previous articleஇலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி (Highlights )
Next articleதோனி வளர்த்த CSK பையனல்லவா – தோனி பாத்திரமேற்ற சஹார்..!