இலங்கையின் இறுதிநேர அதிரடி- ஓமானுக்கு எதிராக போராடி வென்றது இலங்கை…!

இலங்கையின் இறுதிநேர அதிரடி- ஓமானுக்கு எதிராக போராடி வென்றது இலங்கை…!

உலக கிண்ணம் நோக்கிய பயணத்தில் இலங்கை அணி இன்று ஓமான் அணியுடனான 2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் விளையாடியது.

இலங்கை அணியின் இறுதிநேர அதிரடியும், வான வேடிக்கையும் இந்த போட்டியில் போராட்டத்துக்கு மத்தியில் இலங்கை அணிக்கு வெற்றி கிட்டியுள்ளது.

போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி ஆரம்ப விக்கெட்டுக்களை விரைவாக பறிகொடுத்து தடுமாறியது, சந்திமால் மற்றும் கமிந்து மென்டிஸ் ஆகியோர் கோல்டன் டக் முறை மூலமாக முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.

இவர்கள் ஆட்டமிழந்த போது 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலங்கை அணி இருந்தது, அதன்பின்னர் 11 வது ஓவரில் பானுக்க ராஜபக்சவும் ஆட்டமிழக்க இலங்கை அணி 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள் எனும் நிலையில் காணப்பட்டது.

அதன் பின்னர் மிகச் சிறப்பாக 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அணித்தலைவர் தசுன் ஷனாக மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் வீழ்த்தப்படாத 111 ஓட்டங்கள் பெற்றுக்கொள்ள இலங்கை அணி பலமான 162 ஓட்டங்களை பெற்றது. 56 பந்துகளில் இந்த இணைப்பாட்டத்தை அவர்கள் நிலைநாட்டி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தசுன் ஷானக ஆட்டமிழக்காது 59 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கலாக இவர் 83 ஓட்டங்கள் பெற்றார், தசுன் ஷானக 24 பந்துகளில் 5 சிக்சர், இரண்டு பவுண்டரி அடங்களாக 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமையும் கவனிக்கத்தக்கது.

இறுதி இரண்டு ஓவர்களில் இலங்கை அணி 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, அதிலும் இறுதி 3 ஓவர்கள் என்று பார்த்தால் மொத்தம் 52 ஓட்டங்கள் இலங்கை அணியால் பெறப்பட்டன.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணிக்கு விக்கெட் காப்பாளர் நசீம் குஷி 22 பந்துகளில் 4 சிக்சர் இரண்டு பவுண்டரிகளோடு 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார், ஆனாலும் அவர்களால் 143 ஓட்டங்களை மட்டுமே பெறக்கூடியதாக இருந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 4 விக்கட்டுக்களையும் நுவான் பிரதீப், சாமிக கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், இந்த போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் போராட்டத்திற்கு மத்தியில் வெற்றி பெற்றுள்ளது.