இலங்கையின் தடகள ஜாம்பவான் எதிர்வீரசிங்கம் காலமானார்..!

இலங்கையில் பிறந்து சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தவருமான கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அமெரிக்காவில் காலமானார்.

90 வயதான கலாநிதி எதிர்வீரசிங்கம், 1953 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக இலங்கை உயரம் பாய்தல் சாதனையை வைத்திருந்தார்.

1958 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 3 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2.03 M என்ற புதிய ஆசிய விளையாட்டு சாதனையை நிறுவி தங்கப் பதக்கத்தை வென்றார் மற்றும் 1962 இல் இதே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பின்னர் இந்நாட்டின் தடகள விளையாட்டு வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியதோடு குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடகள வளர்ச்சிக்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

இந்த நாட்டில் பிறந்த மற்றுமொரு உயரம் பாய்தல் சம்பியனான மஞ்சுள குமாரவின் சர்வதேச சாதனைகளுக்கு அவர் அளப்பரிய பங்களிப்பை வழங்கியதுடன் அவர் இறக்கும் வரை இலங்கை தடகள நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்திருந்தார்.

1952 ஹெல்சிங்கி மற்றும் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய டாக்டர் எதிர்வீரசிங்கம்.
இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர்.