இலங்கையில் நாளை ஆரம்பமாகும் பீபா சீரிஸ்; நான்கு அணிகள் களத்தில் ..!

இலங்கையில் நாளை ஆரம்பமாகும் பீபா சீரிஸ்;
நான்கு அணிகள் களத்தில் ..!

சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனம் (FIFA) முதல் தடவையாக அறிமுகப்படுத்தியுள்ள பீபா சீரிஸ் (FIFA Series) சிநேகபூர்வ கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டிகள் நாளை 22 மற்றும் 25ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

பூட்டான், பப்புவா நியூ கினியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, இலங்கை ஆகிய நான்கு நாடுகள் பங்குபற்றும் இந்த சிநேகபூர்வ கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்துகிறது.

குறித்த தொடரில் நான்கு நாடுகள் பங்குபற்றுகின்றபோதிலும் ஒவ்வொரு நாடும் இரண்டு போட்டிகளில் மாத்திரமே விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் தொடரின் முதல் போட்டியில் மத்திய ஆபிரிக்க குடியரசு- பூட்டான் ஆகிய நாடுகள் மோதுகின்றன.இந்த போட்டி மாலை 3 மணிக்கு ஆரம்பமாகிறது.

அதேபோல்,இலங்கை தனது முதலாவது போட்டியில் பப்புவா நியூ கினியை நாளை வெள்ளிக்கிழமை இரவு 8.45 மணிக்கு சந்திக்கிறது.

அதேபோல், எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை மத்திய ஆபிரிக்க குடியரசு பப்புவா நியூ கினியாவை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.அதேதினம் இரண்டாவது போட்டியில் மோதவுள்ள இலங்கை அணி பூட்டானை சந்திக்கிறது.இந்த போட்டி இரவு 8.45 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.