அடுத்துவரவிருக்கும் இந்தியா தொடருக்கு தனித்தனியாக பயிற்சி பெற்ற இலங்கையின் சிரேஸ்ட கிரிக்கெட் வீரர்களின் குழுவின் வீரர் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் வட்டாரங்களின் தகவல்படி, சந்துன் வீரக்கொடி கொரோனா தொற்றுக்கு உள்ளானமைை உறுதியானது.
கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்து கொழும்பில் பயிற்சி பெற்ற 15 சிரேஸ்ட கிரிக்கெட் வீரர்களுடன் சந்துன் வீரக்கொடி தொடர்பில் இருந்தவர்.
இந்தியா தொடருக்கு முன்னதாக பயிற்சி போட்டிகளில் விளையாடுவதற்காக சந்துன் வீரக்கொடி மற்றும் பானுகா ராஜபக்ஷ மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் நேற்று இரவு தம்புள்ளைக்கு அனுப்பப்பட்டமையும் இன்னும் சிக்கலை அதிகரிக்க செய்துள்ளது.
தம்புள்ளையில் 24 கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட மற்றொரு குழு பயிற்சியில் உள்ளது, மேலும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பில்லை என்று ஸ்ரீ லங்கா கிரிக்கட் தரப்பு தெரிவித்தாலும் இந்திய தொடரை கொரோனா பாதிப்புக்குள்ளாக்க வாய்ப்புக்கள் தென்படுகின்றன.
சிலவேளைகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதற்கான மாற்று இலங்கை அணியாக இந்த அணி தயார்படுத்தப்படவும் வாய்ப்பிருகலகிறது, ஏனெனில் சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து நாடு திரும்பியதும் இரண்டு பயிற்சி ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான பின்னர் தேசிய அணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கே முக்கியமானது.
ஏற்கனவே 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர், பயிற்சியாளர்களுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக 17 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
இப்போது கிரிக்கெட் வீரர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் இந்த தொடர் இன்னும் சிக்கலானதாக மாற்றம் பெறவிருக்கிறது.
விரைவில் இலங்கை மாற்று அணியை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்த கொரோனா பாதிப்பு நிலமை கொண்டு சென்றிருக்கின்றமையே முக்கியமானது.