இலங்கை கிரிக்கெட்டில் இளையோரின் ஆதிக்கம் .
இளையோர் கிரிக்கெட் கட்டமைப்பு எங்கே சரியாக வழிப்படுத்தப்படுகின்றனவோ அங்கே தேசிய கிரிக்கெட் என்பது பிரகாசமானதாக மாற்றம் பெற்றுவிடும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம் .
இதனால்தான் இளையோர் உலக கிண்ண போட்டிகள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஒழுங்கமைக்கப்பட்டு Futurestars எனும் தொனிப்பொருளில் சிறப்பாக நடந்து வருகின்றன.
இப்போதைய உலக கிரிக்கெட்டை ஆண்டுகொண்டிருக்கும் பலர் 2008 ம் ஆண்டு இளையோர் உலக கிண்ணம் மூலமாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள்.
விராட்கோஹ்லி, வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், ஜடேஜா, ட்ரெண்ட் போல்ட், டிம் சவுத்தி ,ஹெஸ்ஸேல்வூட் ,கிறிஸ் வோக்ஸ் என்று பலரைக் குறிப்பிடலாம் .
2010 ல் பாபர் அசாம், லோகேஷ் ராகுல், மிச்சேல் மார்ஷ், ஜேசன் ஹோல்டர், பட்லர், ஸ்டோக்ஸ், ஆடம் சம்பா, மாயாங் அகர்வால் ஆகியோரை குறிப்பிடுவேன் , நமது பானுக்க இதிலே விதிவிலக்கு ?
இப்படியான இளையோரின் ஆதிக்கம் நிறைந்த உலக கிரிக்கெட்டில் இப்போது பெயர்சொல்லக்கூடிய வகையில் இலங்கை இளையவர்களும் களம் குதித்திருக்கிறார்கள் என்பது பெருமைப்படும் விடயம் என்பேன்.
2004 இல் தலைவராக பார்வீஸ் மஹரூப், 2006 ல் தலைவராக மத்தியூஸ், திமுத் ,2008 ல் சந்திமால், திரிமான்னே, குசல் பெரேரா, திசார பெரேரா , 2010 ல் பானுக ராஜபக்ச, தனுஷ்க குணதிலக, 2012 ல் டிகவெல்ல, 2014 ல் குசல் மெண்டிஸ், பினுரா பெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ் என்று ஒருசில வீரர்களே தேசிய கிரிக்கெட்டில் தம்மை நிலைநிறுத்தியவர்கள்.
ஆனால் அடுத்துவந்த 2016 ஆம் ஆண்டு SL 19 வயதுக்குட்பட்ட உலக கிண்ண அணியில் இடம்பிடித்த அன்றைய இளையவர்களே இன்றைய இலங்கை கிரிக்கெட்டின் கதாநாயகர் களாக மிளிர்கிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது ❤️
அந்த அணியின் தலைவர் சரித் அசலங்க , உதவி தலைவர் வனிந்து ஹசரங்க ?
அசித்த பெர்னான்டோ, லஹிரு குமார , கமிந்து மென்டிஸ் மற்றும் அவிஷ்க பெர்னான்டோ போன்றவர்களும் இருக்கிறார்கள்.
பதும் நிஸ்ஸங்க , பிரவீன் ஜெயவிக்கிரம போன்றவர்களும் 19 வயதுக்குட்பட்ட அணியில் ரோய் டயஸின் வழிகாட்டுதலில் சமகாலத்தில் விளையாடியவர்கள்
இதைவிடவும் காலி, ரிச்மன்ட் கல்லூரி அணியில் விளையாடி நேராக U19 ஊடாக தேசிய கிரிக்கெட்டுக்குள் நுளைந்திருக்கும் சரித் அசலங்க , வணிந்து ஹசரங்க, கமின்து மென்டிஸ், தனஞ்சய லக்ஷான் போன்றவர்கள் சிறப்புக்குரியவர்கள்.
தனஞ்சய டீ சில்வாவும் காலி, ரிச்மன்ட் கல்லூரி தேசிய கிரிக்கெட்டுக்கு கொடுத்து வீரரே, அந்த அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் சில காலம் செயல்பட்ட தம்மிக்க சுதர்ஷன, வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஹசாரங்கவை உலகத்தரம் வாய்ந்த சுழல் ஜாம்பவானாக மாற்றும் அடித்தளத்தை கல்லூரி காலத்தில் அமைத்திட்ட ரிச்மன்ட் கல்லூரியின் உதவி பயிற்சியாளர் லக்மால் டீ சில்வா ஆகியோரை நாம் மறந்துவிட முடியாது.
சங்காவும், மஹேலவும் படித்துப் படித்து சொல்லுவது அதனைத்தான், நாம் தேசிய கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டுமாக இருந்தால் நமது பாடசாலைக் கிரிக்கெட் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது.
அன்று நல்ல நிலையில் பாடசாலைக் கிரிக்கெட் இருந்த காரணத்தால் இன்றைய இலங்கை கிரிக்கெட் வெற்றிகளின்பால் பயணப்பட ஆரம்பித்திருக்கிறது.
தலைவர்களுக்கு பஞ்சம் நிலவிய இலங்கை கிரிக்கெட்டில் தலைமையேற்க இளையோர் கிரிக்கெட்டில் அணிகளை வழிநடத்திய 2014 ல் குசல் மெண்டிஸ், 2016 ல் சரித் அசலங்க, 2022 ல் துணித் வெல்லா லகே என்று அடுத்த தலைமை அணியும் தயாராக காத்திருக்கிறது.
இளையவர்கள் துணிகரமான சாதனைகள் இன்னும் ஏராளம் நமக்காக காத்திருக்கின்றன, பழையவர்களை நம்பிய காலம் கடந்து இளையவர்கள் மீது நம் கிரிக்கெட்டுக்காக முதிலீடு செய்வோம் ,
வெற்றிகள் நோக்கி நாம் பயணப்பட தேவையில்லை, வெற்றிகள் நம்மை நோக்கி தானாக வந்து சேரும்.
Photos -Thepappare
T.Tharaneetharan
22.06.2022
YouTube தளத்தைக்கு ?
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கான விசேட அழைப்பு #yellowfriday2022
பாகிஸ்தான் அணியின் இலங்கை சுற்றுலா விபரம் ?