இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பில் வரும் பாரிய மாற்றங்கள்- தலைமைப் பயிற்சியாளராக வாய்ப்பிருக்கும் ரோஷான் மஹாநாம ..!
இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக பாரிய நெருக்கடிகளையும், தோல்விகளையும் சந்தித்து வரும் அணியாக இருக்கிறது.
இதன் காரணத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் மாத்திரமன்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுடைய அதிருப்தியையும், ஆவேச கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட்டை மீட்பதற்கு முன்னாாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் முனைவதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன.
இலங்கையின் பிரபலமான ஊடகமான சண்டே டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
குறிப்பாக இலங்கை அணியின் 19 வயதுக்குட்பட்ட அணியின் ஆலோசகராக மஹேல ஜெயவர்தன இணைத்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
அரவிந்த டீ சில்வாவின் அழைப்பை ஏற்று அக்டோபர் மாதம் முதல் மஹேல ஜெயவர்தன 19 வயதுக்கு உட்பட்ட அணியின் ஆலோசகராக உள்ளார் ,இதேவேளை இலங்கை 19வது வயதுக்குட்பட்ட அல்லது இலங்கை A அணி ஆகியவற்றின் தலைமை பயிற்சியாளராக அவிஷ்க குணவர்த்தன இணைய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இவருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்திருந்த நிலையில், கிரிக்கெட் நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது போனது, அந்த தடைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட காரணத்தால் மீண்டும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி அல்லது A அணியின் பயிற்சியாளராக செயற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்படுவதற்கான அழைப்பு முன்னாள் போட்டி மத்தியஸ்தர் மஹானாமவுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.
மிகச்சிறந்த பயிற்றுவிப்பு பண்புகளைக் கொண்டிருக்கும் மகாநாம, இலங்கை அணியை மேல் நோக்கி கொண்டு செல்ல உதவுவார் என்றும் இந்தியாவின் ரவி சாஸ்திரி போன்று ஒருவராக அவரால் செயல்பட முடியும் என்று நம்புவதால் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு ஒப்படைக்கப்படும் வாய்ப்புகள் தெரிகின்றன.
தற்போதைய தலைமை பயிற்சியாளரான மிக்கி ஆதருடைய பயிற்றுவிப்பில் இலங்கை அணி பெருமளவில் வெற்றி பெறுவதற்கு தடுமாறுகிறது ,இந்த நிலையில் வருகிற டிசம்பர் மாதம் அவருடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு ரோஷன் மஹாநாமவிடம் தலைமை பயிற்றுவிப்பு பணி கையளிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
இது மாத்திரமல்லாமல் இலங்கை அணி அண்மைக் காலம் துடுப்பாட்டத்தில் மோசமான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது, துடுப்பாட்ட பயிற்சியாளராக இருக்கும் ஜிம்பாப்வேயின் கிராண்ட் பிளவரது ஒப்பந்த காலத்தை முடித்துக் கொண்டு அதற்கு இன்னும் ஒருவர் நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அறியப்படுகிறது.
எது எவ்வாறாயினும் இனிவரும் நாட்களில் இலங்கை கிரிக்கெட்டில் பயிற்றுவிப்பு கட்டமைப்புகளில் மாற்றங்கள் நிகழலாம் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அணி ஒருநாள், ட்வென்டி ட்வென்டி, டெஸ்ட் போட்டிகளின் தரநிலையில் 8ஆம் 9ஆம் நிலைகளிலேயே இருந்து வருகின்றமையும் முக்கியமான விடயமாக கருதப்படுகிறது.